டெல்லி: இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) 2024ஆம் ஆண்டின் 17வது சீசனுக்கான போட்டி அட்டவணை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால் முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணையே தற்போது வெளியிடப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலின் அறிவிப்பு வந்த பின்பே மீதமுள்ள போட்டிகளின் அட்டவணை வெளியிடப்படுவதாக என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மார்ச் 22ஆம் தேதி தொடங்க இருப்பதாகவும், முதல் போட்டி சென்னை - பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியான சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 9வது முறையாக சென்னை அணி முதல் லீக் ஆட்டத்தில் விளையாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த 21 போட்டிகளில் கொல்கத்தா அணி 3 போட்டிகளிலும், சென்னை, மும்பை, பஞ்சாப், லக்னோ, ஹைதராபாத், ராஜஸ்தான் ஆகிய அணிகள் 4 போட்டிகளிலும், டெல்லி, பெங்களூரு, குஜராத் ஆகிய அணிகள் 5 போட்டிகளிலும் விளையாடுகின்றன.
சென்னை அணி பெங்களூரு, குஜராத், டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகளை மார்ச் 22, 26, 31 மற்றும் ஏப்ரல் 5ஆம் தேதிகளில் முறையே எதிர்கொள்கிறது. அதேபோல் மும்பை அணி குஜராத், ஹைதராபாத், டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகளுடன் முறையே மார்ச் 24, 27, ஏப்ரல் 1 மற்றும் 7 ஆகிய தேதிகளில் மோதுகின்றது. பெங்களூரு அணி சென்னை, பஞ்சாப், கொல்கத்தா, லக்னோ மற்றும் ராஜஸ்தான் அணிகளுடன் மார்ச் 22, 25, 29 ஏப்ரல் 2 மற்றும் 6ஆம் தேதிகளில் எதிர்கொள்கிறது.
அதே மாதிரி சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணி முதல் போட்டியாக மும்பை அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியானது அகமதாபாத் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. தொடர்ந்து இரண்டாவது போட்டியாக சென்னை அணியையும், 3, 4 மற்றும் 5வது போட்டியாக ஹைதராபாத், பஞ்சாப் மற்றும் லக்னோ அணிகளுடனும் மோதுகின்றது.
இதையும் படிங்க: ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து முகமது ஷமி விலகல்? - என்ன காரணம்?