சென்னை: 33வது ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுபா வெங்கடேசன், வித்யா ராம்ராஜ், ராஜேஷ் ரமேஷ், பிரவீன் சித்திரவேல், ஜெஸ்வின் ஆல்ட்ரின், சந்தோஷ் தமிழரசன் ஆகிய 6 தடகள வீரர்கள் பங்கேற்றனர்.
ஒலிம்பிக் தொடரில் தமிழ்நாட்டிலிருந்து தடகளத்தில் 6 வீரர்கள் பங்கேற்றது இதுவே முதல்முறையாகும். இதனை ஊக்கப்படுத்தும் விதமாகவும், எதிர்காலத்தில் அதிக ஒலிம்பிக் வீரர்களை உருவாக்கும் முனைப்பிலும் வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. சென்னை பெரியமேட்டில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் இந்த பாராட்டு விழா நடைபெற்றது.
இதில் தமிழக தடகள வீரர்கள் 6 பேருக்கு தலா ஒரு லட்சம் மற்றும் இந்திய தடகள அணியின் பயிற்சியாளர் பிரேமானந்த் 25,000 ரூபாய் காசோலையாக வழங்கப்பட்டது. இது குறித்து விழாவில் பங்கேற்ற வீரர்கள் கூறியதாவது, “தமிழ்நாடு அரசு தங்களுக்கு சிறப்பான முறையில் உதவியதாகவும், பாரீசில் தங்களுக்குத் தேவையான அனைத்தையும் தமிழ்நாடு அரசு முழுமையாக ஏற்படுத்திக் கொடுத்ததாகவும்" தெரிவித்தனர்.
மேலும் தொடரில் பங்கேற்று தாயகம் திரும்பிய போது தங்களை அழைத்து பாராட்டிய விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 'வீரர்களாகிய நீங்கள் பயிற்சியில் கவனம் செலுத்துங்கள், தேவையானவற்றை நாங்கள் செய்து தருகிறோம்' எனக் கூறியது தங்களை மேலும் உத்வேகப்படுத்தியதாக தெரிவித்தனர்.
இதுவரை இல்லாத அளவிற்கு தமிழ்நாடு அரசு விளையாட்டு வீரர்களுக்கு பல்வேறு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகவும், அடுத்த ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே இலக்கு எனவும் வீரர்கள்" தெரிவித்தனர். இந்த பாராட்டுவிழா நிகழ்வில், தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் லதா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, காவல்துறை அதிகாரி சுதாகர், நந்தகுமார் ஐஆர்எஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் இறுதியில் நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற 54வது இளையோர் தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசு வழங்கப்பட்டது.
பாரீஸில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் 117 இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த 13 பேர் பங்கேற்றனர். இவர்கள் நீளம் தாண்டுதல், பாய்மரப்படகு போட்டி, துப்பாக்கிச் சுடுதல், டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: புனேரி பல்தானை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முன்னேறியது பெங்களூரு ஸ்மாஷர்ஸ்!