சண்டிகர்: 17வது ஐபிஎல் தொடரின் 23வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் இன்று விளையாடி வருகிறது. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது. தனது சொந்த மண்ணான சண்டிகர் மைதானத்தில் இறங்கிய பஞ்சாப் அணி, ஆரம்பத்தில் கொஞ்சம் ரன்களை வழங்கியது.
சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஹெட், அபிஷேக் சர்மா சற்று அதிரடியாக ஆட்டத்தை துவக்கினர். ஆனால், அர்ஷ்தீப் சிங் இந்த ஜோடியைப் பிரித்தார். அவரது பந்தில் டிராவிஸ் ஹெட் 21 ரன்களில் தவானிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். பின்னர் அதிரடி காட்டிய அபிஷேக் சர்மா, சாம் கரண் பந்தில் 16 ரன்களுக்கு அவுட்டானார். சற்று பொறுமையாக ஆடிய திரிபாதி, ஹர்ஷல் படேல் பந்தில் 11 ரன்களுக்கு அவுட்டானார்.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய கிளாசென் மிகவும் பொறுமையாக ரன்கள் சேர்த்தார். அதிக நேரம் நிலைக்காத கிளாசென் 9 ரன்களுக்கு அவுட்டானார். ஒரு பக்கம் விக்கெட் விழுந்தாலும், மறுபக்கம் நிதிஷ் ரெட்டி நிலைத்து நின்று ரன்கள் சேர்த்தார். அவர் 50 ரன்கள் எடுத்திருந்த போது, ஷசாங்க் சிங் அவரது கேட்ச்சை தவறவிட்டார். அவருக்கு உறுதுணையாக இருந்து அதிரடியாக ரன்கள் சேர்த்த அப்துல் சமாத், 25 ரன்களுக்கு அர்ஷ்தீப் சிங் பந்தில் அவுட்டானார்.
அவரைத் தொடர்ந்து சன்ரைசர்ஸ் அணிக்கு நம்பிக்கையாகத் திகழ்ந்த நிதிஷ் ரெட்டி 37 பந்தில் 64 ரன்கள் எடுத்து, அர்ஷ்தீப் சிங் பந்திலேயே அவுட்டானார். கடைசி ஓவரில் புவனேஷ்வர், உனாத்கட் ஆகியோர் தங்கள் பங்கிற்கு சிக்ஸர் அடிக்க சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. கடினமான இலக்கை நோக்கி களமிறங்கியுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி, 14 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்து விளையாடி வருகிறது. பேர்ஸ்டோவ், கம்மின்ஸ் பந்தில் ரன் எதுவும் எடுக்காமல் போல்டானார்.
இதையும் படிங்க: மும்பை அணி கொடுத்த ஆஃபர்..சிஎஸ்கேவுக்கு விளையாடாமல் போக காரணம்? மனம் திறந்த தினேஷ் கார்த்திக் - Dinesh Karthik