டெல்லி: 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கிளைமாக்ஸ் காட்சியை நெருங்கி உள்ள நடப்பு ஐபிஎல் சீசனில் இதுவரை எந்த அணியும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாததால் அடுத்த வரும் ஆட்டங்கள் அனல் பறக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.
இந்நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் மெதுவாக பந்துவீசிய காரணத்திற்காக டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பன்ட் ஒரு ஆட்டத்தில் விளையாட ஐபிஎல் நிர்வாகம் தடை விதித்துள்ளது. கடந்த மே 7ஆம் தேதி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற 56வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதிக் கொண்டன.
-
DC captain Rishabh Pant suspended for one match for Code of Conduct Breach, set to miss IPL match against RCB on Sunday.#RishabhPant #RCBvsDC #IPL2024 pic.twitter.com/mg2a2R3LfZ
— Press Trust of India (@PTI_News) May 11, 2024
இந்த ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி ஒதுக்கப்பட்ட நேரத்தை காட்டிலும் கூடுதலாக பந்துவீச நேரம் எடுத்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இரண்டு முறை இது போன்று பந்துவீச கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டதாக டெல்லி அணிக்கு ஐபிஎல் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்து இருந்தது.
இந்நிலையில், மூன்றாவது முறையாக மீண்டும் அதே தவறு தொடர்ந்த நிலையில், ஐபிஎல் ஒழுங்கு நடவடிக்கை விதிமுறைகளை மீறியதாக கூறி டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பன்ட்க்கு அபராதம் மற்றும் ஒரு போட்டியில் விளையாட தடை விதித்து ஐபிஎல் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இது தொடர்பாக ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடர்ந்து குறித்த நேரத்தில் பந்துவீசி முடிக்காமல் ஒழுங்கு விதிகளை மீறிய நிலையில், டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பன்ட்க்கு 30 லட்ச ரூபாய் அபராதம் மற்றும் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் நாளை (மே.12) பெங்களூருவில் நடைபெறும் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ரிஷப் பன்ட் விளையாடுவது சந்தேகம் தான் எனக் கூறப்படுகிறது. இது தவிர ஐபிஎல் ஒழுங்கு நடவடிக்கைகளை மீறியதற்காக ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணியின் ஆடும் லெவனில் இடம் பெற்ற அனைத்து வீரர்களுக்கும் 12 லட்ச ரூபாய் அல்லது போட்டிக் கட்டணத்தில் 50 சதவீதம், இரண்டில் எது குறைவாக இருந்ததாலும் அபராதமாக வசூலிக்கப்படும் என்றும் ஐபிஎல் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 7ஆம் தேதி ராஜஸ்தான் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கிரவுண்டுக்குள் நுழைந்த ரசிகர்..ஜாலியாக விளையாடிய தோனி..இணையத்தில் வைரலாகும் வீடியோ! - MS Dhoni Viral Video