அகமதாபாத்: 17வது ஐபிஎல் (IPL 2024) தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் எலிமினேட்டர் போட்டியில் (Eliminator) ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RR VS RCB) அணிகள் மோதின. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, முதலில் களமிறங்கிய பெங்களூரூ 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்களைக் குவித்தது. அதில், விராட் கோலி 33 ரன், ராஜ் படிதர் 34 ரன், லோம்ரோர் 32 ரன்கள் குவித்து இருந்தனர். ராஜஸ்தான் தரப்பில் அவேஷ்கான் 3 விக்கெட்டும், அஸ்வின் 2 விக்கெட்டும் சாய்த்தனர்.
டிரென்ட் போல்ட் ஒரு விக்கெட் வீழ்த்தியதுடன் 4 ஓவரில் 16 ரன் மட்டுமே வழங்கினார். இதனையடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது ராஜஸ்தான் அணி. டாம் கோஹ்லர் - காட்மோர் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினார். இருவரும் இணைந்து திருப்திகரமான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் 20 ரன்கள் எடுத்த இருந்த டாம் அவுட் ஆகி வெளியேற, மறுபுறம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜெய்ஸ்வால் 46 ரன்களுக்கு அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார்.
இதனையடுத்து களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் 17 ரன்கள் எடுத்த நிலையில், கரன் சர்மா வீசிய பந்தில் விக்கெட் இழந்து வெளியேறினார். அடுத்து களமிறங்கிய துருவ் ஜுரல் 8 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் ரன் அவுட் ஆனார். இதனைத் தொடர்ந்து 5வது விக்கெட்டுக்கு ரியான் பராக்கும், இம்பேக்ட் பிளேயராக களமிறங்கிய ஹெட்மயரும் ஜோடி சேர்ந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றனர்.
அணியின் ஸ்கோர் 157 ஆக உயர்ந்த போது, 26 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உட்பட 36 ரன் எடுத்து இருந்த ரியான் பராக், சிராஜ் வீசிய பந்தில் கீளிம் போல்ட் ஆகி வெளியேறினார். அதே ஓவரில் ஹெட்மயரும் வீழ்ந்தார். இதனால் போட்டி சற்று சுவாரஸ்யமாக மாறியது. கடைசி 2 ஓவர்களில் ராஜஸ்தான் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. 19வது ஓவரை லாக்கி பெர்குசன் வீச அந்த ஓவரில் 2 பவுண்டரி ஒரு சிக்ஸர் என அடித்து நெருக்கினார் ரோமன் பவல்.
இதனால் 19 ஓவரின் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ராஜஸ்தான், குவாலிபயர் 2க்கு தகுதி பெற்றது. நாளை (மே 24) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள குவாலிபயர் 2 போட்டியில் ராஜஸ்தான் - ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.
இதையும் படிங்க: ஐபிஎல் தொடரில் எந்த அணி வெற்றி பெற்றாலும் தமிழருக்கு பெருமை தான்.. எப்படி தெரியுமா?