பனிபட்: பாரீஸ் ஒலிம்பிக் ஆடவர் ஈட்டி எறிதலில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியதன் மூலம் இந்தியாவுக்கு ஒரு பதக்கத்தை உறுதி செய்து உள்ளார் நீரஜ் சோப்ரா. அரியானா மாநிலம் பனிபட் மாவட்டம் கந்த்ரா கிராமத்தை சேர்ந்தவர் நீரஜ் சோப்ரா. பாரீஸ் ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் வெற்றியை தொடர்ந்து, அவரது சொந்த கிராமமே விழாக் கோலம் பூண்டு உள்ளது.
இறுதிப் போட்டிக்கு முன்னேறியதன் மூலம் தனது மகன் நாட்டுக்காக நிச்சயம் பதக்கத்தை வெல்வார் என நீரஜ் சோப்ராவின் தந்தை சுபாஷ் சோப்ரா தெரிவித்து உள்ளார். கடந்த மூன்று நாட்களுக்கு முன் தான் நீரஜ் சோப்ராவிடம் பேசியதாகவும் அவர் நல்ல உடல் நிலையுடன் உள்ளதால் நாட்டுக்காக நிச்சயம் ஒரு பதக்கத்தை வென்று வருவார் என்றும் சுபாஷ் சோப்ரா கூறினார்.
டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 87.58 மீட்டர் வீசி தங்கம் வென்றார். அதேநேரம் தற்போதைய பாரீஸ் ஒலிம்பிக்கில் தகுதிச் சுற்றிலேயே நீரஜ் சோப்ரா 89.34 மீட்டர் உயரத்திற்கு ஈட்டி எறிந்ததால், இந்தியாவுக்காக நிச்சயம் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து பேசிய நீரஜ் சோப்ராவின் தாத்தா, பேரன் நீரஜின் விளையாட்டை காண ஒட்டுமொத்த குடும்பமே எதிர்பார்த்து காத்திருப்பதாக கூறினார். மீண்டும் ஒருமுறை ஒட்டுமொத்த நாட்டையும் நீரஜ் பெருமை கொள்ள வைப்பார் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். பாரீஸ் ஒலிம்பிக்கில் எந்த பதக்கமாக இருந்தாலும் பரவாயில்லை என்றும் விளையாட்டின் போது நீரஜின் கவனம் சிதறாமல் இருக்க தான் அவருடன் பேசுவதில்லை என்றும் நீரஜ் சோப்ராவின் தாத்தா தெரிவித்தார்.
ஒட்டுமொத்த குடும்பமும் நீரஜிடம் விளையாட்டு போட்டியின் இடையே பேசும் போது, தான் அவர் வீடு திரும்பிய போது மட்டுமே பேசுவேன் என்றும் அவர் தெரிவித்தார். நீரஜ் சோப்ரா வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி இறுதிப் போட்டியில் விளையாடுகிறார். தகுதிச் சுற்றில் 89.34 மீட்டர் உயரம் வீசிய நிலையில், இறுதிப் போட்டியில் அதை விட அதிக உயரத்திற்கு நீரஜ் சோப்ரா ஈட்டி எறிவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு பதக்கம்? வினேஷ் போகத் அரைஇறுதிக்கு தகுதி! - paris olympics 2024