டெல்லி: டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கமும், பாரீஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கமும் வென்ற இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவும், பாரிஸ் ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதலில் இரண்டு பதக்கங்களை வென்ற வீராங்கனை மனு பாக்கரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் பரவியது.
மனு பாக்கரின் தாய் சுமேதா பாக்கர், நீரஜ் சோப்ராவை சந்தித்த வீடியோ மற்றும் தனிமையில் நீரஜ் மற்றும் மனு பாக்கர் பேசிக் கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோ நெட்டிசன்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், எக்ஸ் பயனர்கள் இரு தரப்பிலும் திருமண பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன என்று கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து மனு பாக்கரின் தந்தை ராம் கிஷன் விளக்கம் அளித்து உள்ளார். அதில் நிரஜ் - மனு பாக்கர் இடையே திருமணம் நடைபெறுவதாக கூறப்படுவது வதந்திகள் என விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், "மனு இன்னும் சாதிக்க வேண்டியது இருக்கிறது. எனவே இப்போது அவளது திருமணத்தைப் பற்றி சிந்திக்கவில்லை" என்று கூறினார்.
மேலும், தனது மனைவியும் நீரஜ் சோப்ராவும் பேசும் வீடியோவுக்கு பதிலளித்த ராம் கிஷன், மனு பாக்கரின் தாய் நீரஜ் சோப்ராவை தனது மகனைப் போலவே நடத்துகிறார் என்று கூறினார். நீரஜ் சோப்ராவின் மாமாவும் திருமணம் குறித்த வதந்திகள் குறித்து பேசி உள்ளார். நீரஜ் பதக்கத்தைக் கொண்டு வந்த போது, முழு நாடும் அதைப் பற்றி அறிந்தது.
அதேபோல், அவர் திருமணம் செய்து கொண்டால், அனைவருக்கும் தெரிந்துவிடும் என்றார். நீரஜ் சோப்ரா மனு பாக்கர் ஆகிய இருவரும் அரியானாவைச் சேர்ந்தவர்கள். ஒலிம்பிக் தடகளத்தில் பதக்கம் வென்ற முதல் இந்திய தடகள வீரர் நீரஜ் சோப்ரா ஆவார். பாரிஸ் ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் வெள்ளி வென்றார்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் வென்றார். அதேபோல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் கலப்பு பிரிவிலும் மனு பாக்கர் வெண்கலம் வென்றார். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் துப்பாக்கி சுடும் வீராங்கனை மற்றும் ஒரே ஒலிம்பிக்கில் இரண்டுக்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்ற வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.
இதையும் படிங்க: பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு உற்சாக வரவேற்பு! ஓய்வு குறித்து கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் கூறியது என்ன? - Mens Hockey team in delhi