சென்னை: 17வது ஐபிஎல் தொடர் இன்று சென்னையில் கோலாகலமாக துவங்கியது. இந்த சீசனில் துவக்க விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான், அக்ஷய் குமார், பிரபுதேவா உள்ளிட்ட பல திரை நட்சந்திரங்களும், கிரிக்கெட் ஜாம்பவான்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
முதல் போட்டியில் இன்று சென்னை எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகிறது. சென்னை அணியைப் பொறுத்தவரை ருத்துராஜ் கெய்க்வாட் முதன்முதலில் கேப்டனாக களமிறங்குவதால், புத்துணர்ச்சியுடன் காணப்படும். நடப்பு சாம்பியனான சென்னை அணிக்கு, ஆல் ரவுண்டர் ரச்சின் ரவீந்திரா மற்றும் மிட்சல் ஆகியோரது வருகை பேட்டிங்கிற்கு வலுசேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேப்டன் பதவிலிருந்து விலகிய தோனி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் என தகவல் வெளியாகியுள்ளது. இளம் வீரர் சமீர் ரிஸ்வி மேலும் அணிக்கு வலுசேர்க்கிறார். சிஎஸ்கே அணியில் மொயின் அலி, ரவீந்திரா, சிவம் துபே, ஜடேஜா என பல ஆல் ரவுண்டர்கள் உள்ளனர். பவுலிங்கைப் பொறுத்தவரை சர்துல் தாகூர், ரஹ்மான் ஆகியோரது வருகை முக்கிய பங்கு வகிக்கும்.
அதேபோல், பெங்களூரு அணியும் அசுர பலத்துடன் இருக்கிறது. விராட் கோலி கடந்த சில மாதங்களாக கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காத நிலையில், இன்று களமிறங்குகிறார். ஆர்சிபி அணிக்கு கேமரான் கிரீன், ரஜத் பட்டிதார் வருகை மேலும் வலுசேர்க்கிறது.
அது மட்டுமின்றி ஃபெர்குசன், டாம் குர்ரன், யாஷ் தயால் ஆகியோர் சென்னை அணிக்கு சிம்ம சொப்பனமாக இருப்பர் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். மேலும் சிராஜ், டாம் குர்ரன், அல்சாரி ஜோசஃப் என பவுலிங் படை அனுபவத்துடன் நீண்டு கொண்டே போகிறது. சென்னை மைதானத்தில் முதல் போட்டியை சிஎஸ்கே வெற்றியுடன் துவக்குமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்த நிலையில், டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.