சென்னை: 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நேற்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி மே 26ஆம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இதன் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை (CSK vs RCB) எதிர் கொண்டது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, தொடங்க வீரர்களாக டுபிளசிஸ் மற்றும் விராட் கோலி களமிறங்கினார். இதில் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய ஆர்சிபி அணியின் கேப்டன் டுபிளசிஸ் 35 ரன்கள் எடுத்து இருந்தபோது, முஸ்தபிசுர் ரஹ்மான் பந்து வீச்சில் ரச்சின் ரவீந்திராவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இதனையடுத்து களமிறங்கிய ரஜத் பட்டிதார் வந்த வேகத்தில் டக் அவுட் ஆகி வெளியேறினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிளன் மேக்ஸ்வெல், தீபக் சாஹர் வீசிய பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆகி வெளியேறினார்.
இதனைத்தொடர்ந்து விராட் கோலி 21, கேமரூன் கிரீன் 18 ரன்கள் பெரிதாக சோபிக்கவில்லை. இதனால், 78 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து ஆர்சிபி அணி தடுமாறியது. ஒரு கட்டத்தில் 150 ரன்களை தாண்டுமா? என எண்ணிய போது, இளம் வீரரான அனுஜ் ராவத் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் இனைந்து அதிரடியாக ஸ்கோரை உயர்த்தினர்.
அனுஜ் ராவத் 25 பந்துகளில் 48 ரன்களும் தினேஷ் கார்த்திக் 26 பந்துகளில் 38 ரன்களும் சேர்த்தனர். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் குவித்தது. சிஎஸ்கே அணிக்காக முதல் போட்டியில் களமிறங்கிய முஸ்தாபிசுர் ரஹ்மான் 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.
இதனையடுத்து அடுத்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணியில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 15 ரன்களுக்கு அவுட் ஆகி வெளியேறினார். இதனையடுத்து களமிறங்கிய அஜிங்க்யா ரஹானே - ரச்சின் ரவீந்திரன் சேர்ந்து அணியின் ஸ்கோரை அதிரடியாக உயர்த்தினர்.
அணியின் ஸ்கோர் 71 ரன்னாக இருந்த போது, கரண் சர்மா வீசிய பந்தில் ரச்சின் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனைத்தொடர்ந்து ரஹானே 27 மற்றும் டேரன் மிட்செல் 22 ரன்களுக்கு வெளியேற, இம்பேக்ட் வீரராக களமிறங்கிய சிவம் துபே- ஜடேஜாவுடன் ஜோடி சேர்ந்து நிதனமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் 18.4 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது. சிவம் துபே 34 ரன்களுடனும், ஜடேஜா 25 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
2008ஆம் ஆண்டுக்கு பிறகு சிஎஸ்கே அணியை அதன் செந்த மண்ணியில் ஆர்சிபி அணியை வீழ்த்தியதே கிடையாது. 16 ஆண்டுகளாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடரும் இந்த சோதனைக்கு ஆர்சிபி இந்த போட்டியில் முடிவு கட்டும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மீண்டும் தோல்வியை சந்தித்துள்ளது.