ஆன்டிகுவா: 9வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் ஆட்டங்கள் நிறைவு பெற்ற நிலையில் தற்போது, சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் ஆன்டிகுவாவில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா - வங்கதேசம் ஆகிய அணிகள் விளையாடின.
இதில் டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் துவக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் சேர்ந்து 39 ரன்கள் குவித்த நிலையில் ரோஹித் சர்மா ஷகிப்(23) பந்தில் ஆட்டமிழந்தார். பின்பு கோலியுடன் இணைந்த ரிஷப் பண்ட் ரன்களைக் குவிக்கத் தொடங்கினர். 28 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்த விராட் கோலி டன்ஷிம் ஹசன் பந்தில் தனது விக்கெட்டை இழந்தார்.
மறுபுறம் அதிரடியாக ஆடிய ரிஷப் பண்ட்(36) ரிவர்ஸ் சுவீப் அடிக்கும் முயற்சியில் ரிஷாத் ஹொசைன் சுழலில் வெளியேறினார். பின்னர் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 6 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார். அடுத்ததாக களமிறங்கிய ஷிவம் துபே மற்றும் ஹர்திக் பாண்டியா ஜோடி அதிரடியாக விளையாடி வங்கதேச பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்தனர்.
24 பந்துகளில் 6 சிக்ஸர் உட்பட 34 ரன்கள் சேர்த்து துபே வெளியேறினார். இறுதிவரை நின்று ஆடிய துணைக்கேப்டன் பாண்டியா 27 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர் உட்பட 50 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இறுதியாக இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணியில் லிட்டன் தாஸ் 13 ரன்களிலும், தான்சித் 29 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்துவந்த வங்கதேச அணியின் கேப்டன் தன் பங்கிற்கு 40 ரன்கள் அடித்து பும்ரா வேகத்தில் ஆட்டமிழந்தார். பின்பு களமிறங்கிய பேட்டர்கள் யாரும் பெரிதாக சோபிக்கவில்லை. ஹிர்டாய் 4 ரன்களிலும், ஷகிப் அல் ஹசன் 11 ரன்களிலும் குல்தீப் சுழலில் வெளியேறினர்.
இதைத்தொடர்ந்து மஹ்மதுல்லா(13), ஜாக்கர் அலி(1), ரிசாத் ஹொசைன்(24) ஆகியோர் தொடர்ச்சியாக ஆட்டமிழந்தனர். கடைசியாக வங்கதேச அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்து 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக குல்தீப் 3 விக்கெட்டுகளும், பும்ரா மற்றும் அர்ஷ்தீப் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இந்த போட்டியில் இந்திய அணி பெற்ற வெற்றியின் மூலமாக டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.
இதையும் படிங்க: கம்மின்ஸ் ஹாட்ரிக் எடுத்து அசத்தல்! 17 வருடங்களுக்கு பிறகு பிரட் லீயின் சாதனை சமன்!