சென்னை: பாரிசில் நடைபெற உள்ள ஒலிம்பிக் தொடரில் பாய்மர படகு விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க இந்தியாவிலிருந்து சென்னை வீராங்கனை நேத்ரா குமணன் தகுதி பெற்றுள்ளார். 22 வயது நிரம்பிய நேத்ரா ஆசிய விளையாட்டுப் போட்டிகள்,
ஆசிய பாய்மர படகு விளையாட்டுப் போட்டிகள் என அடுத்தடுத்து முயற்சிக்குப் பிறகு, பிரான்சில் நடைபெற்று முடிந்த விளையாட்டு தொடரில் 67 புள்ளிகளுடன் 5 ஆவது இடம் பிடித்து ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதி பெற்றுள்ளார்.
இதனையடுத்து நேத்ராவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி உள்ளிட்ட பலர் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் பிரான்சில் இருந்து சென்னை வந்தடைந்த நேத்ராவுக்கு சென்னை விமான நிலையத்தில் பெற்றோர், பயிற்சியாளர்கள், பாய்மர படகு விளையாட்டு கழக பொறுப்பாளர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நேத்ரா குமணன் கூறுகையில்," டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் முதல் முறையாகப் பங்கேற்றேன். தற்போது பாரீஸில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ளேன். இதில் வெற்றி பெறுவதற்கு உண்டான அணைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளவுள்ளேன்.
கடைசி முறை எனக்குக் கிடைத்த வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டேன். பிரான்ஸ் போட்டியில் முதல் 10 இடங்களைப் பிடிக்க வேண்டும் என்ற இலக்கை கொண்டிருந்தேன். அதனை செய்து முடித்ததால் இரண்டாவது முறையாக நமது நாட்டிற்காகப் பாய்மர படகு போட்டியில் களம் கான உள்ளேன் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாடு பாய்மர படகு கழகம், இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் எனது பெற்றோர், பயிற்சியாளர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அரசு தரப்பிலிருந்து எனது பயிற்சிக்கான அனைத்து உதவிகளையும் சிறப்பாகச் செய்து கொடுத்தனர்.
பாய்மர படகு போட்டி என்பது இந்தியாவில் பலரும் அறியப்படாத ஒரு போட்டியாகும். இதனை அனைவருக்கும் கொண்டு செல்வதுதான் என்னுடைய கனவாகும். விரைவில் முதலமைச்சர், விளையாட்டுத்துறை அமைச்சர் உள்ளிட்டவற்றைச் சந்திக்க உள்ளேன்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: டி20 உலகக் கோப்பைக்கு தகுதியானவர் நடராஜன்: முத்தையா முரளிதரன் கருத்து!