ஐதராபாத்: தான் படித்த பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டது குறித்து கிரிக்கெட் வீரர் நடராஜன் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் தங்கராசு நடராஜன். சாதாரண கிராமத்தில் பிறந்து இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்து சாதனை படைத்து உள்ளார். டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகள் மூலமாக ஐபிஎல் தொடரில் விளையாட வாய்ப்பு கிடைத்த நிலையில் அதிலும் தனது தனித் திறமையை நிரூபித்து காட்டி சர்வதேச அணிக்கு தேர்வானவர் நடராஜன்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சன்ரைசஸ் ஐதராபாத் அணிக்காக நடராஜன் தொடர்ந்து விளையாடி வருகிறார். இந்திய அணிக்கு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாடி உள்ள நடராஜன் 13 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார். தொடர்ந்து ரஞ்சி, விஜய் ஹசாரே, டிஎன்பிஎல் உள்ளிட்ட முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் நடராஜன் தொடர்ந்து விளையாடி வருகிறார்.
இருப்பினும் அவருக்கு அடுத்தடுத்த சர்வதேச வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் தொடர்ந்து ஜொலித்து வரும் நடராஜனுக்கு சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட வாய்ப்பு மறுக்கப்படுவது தொடர்ந்து சர்ச்சையை கிளப்பி வருகிறது. முன்னதாக காயம் காரணமாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வில் இருந்த நடராஜன் தற்போது பூரண குணமடைந்து இந்திய அணியில் விளையாட முழு உடல் தகுதியுடன் காணப்படுகிறார்.
இந்நிலையில் நடராஜன் தான் படித்த பள்ளியில் நடந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சின்னப்பட்டியில் உள்ள அரசு உயர் நிலைப் பள்ளியில் நடந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடராஜன் அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பள்ளி விழாவில் கலந்து கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்து "எல்லாம் எங்கு தொடங்கியதோ அங்கேயே திரும்பியதில் மகிழ்ச்சி. என்னை சிறப்பு விருந்தினராக அழைத்ததற்கு அரசு உயர் நிலைப் பள்ளி, சின்னப்பம்பட்டிக்கு நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சிக்சருடன் கேரியரை தொடங்கிய வீரர்கள்! பட்டியலில் 2 இந்திய வீரர்கள்! யாரார் தெரியுமா? - players hit six on his first ball