சென்னை: இந்தியாவில் முதன்முறையாக நடைபெறும் இரவு நேர ஃபார்முலா 4 கார் பந்தயத்தை சென்னையில் இன்று விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த பார்முலா 4 கார் பந்தயமானது தனி நபராகவும், இந்தியன் ரேசிங் லீக் அணியாகவும் நடத்தப்படுகிறது. இந்த பந்தயம் சென்னையின் மையப் பகுதியான தீவுத்திடலைச் சுற்றி 3.5 கிலோமீட்டர் தொலைவிற்கு நடத்தப்படுகிறது.
இந்நிலையில், ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்துவதற்கான சர்வதேச ஆட்டோமொபைல் கூட்டமைப்பின் (FIA) அனுமதியை பெறுவதற்கு தாமதமானது. அதனால், இன்று நடக்கப்பட இருந்த ஃபார்முலா 4 தகுதிச்சுற்று 1 மற்றும் 2, இந்திய சாம்பியன்ஷிப் தகுதிச்சுற்று 2 போட்டிகள் நாளை மாற்றப்பட்டுள்ளது.
அதனால் இன்று இரவு 10.00 மணி வரை பயிற்சி மட்டும் தான் நடைபெற்றது. இந்த போட்டியும், பயிற்சியையும் காண ஆயிரக்கணக்கான மக்கள் திரளாக கலந்துகொண்டனர். இதில் முதல் ஓட்டத்தில் சாலையின் தன்மையை அறிய, அதற்கு ஏற்றார் போல் ஃபார்முலா 4 காரை ஓட்டிச் சென்றனர். பின்னர் மெல்ல காரின் வேகத்தை கூட்டி பயிற்சி பெற்றனர். நாளை எந்த நேரத்தில் இந்தியன் சாம்பியன்ஷிப் மற்றும் ஃபார்முலா 4 பந்தயம் நடைபெறும் என்ற அட்டவணை வெளியாகியுள்ளது.
இந்த போட்டியின் முதல் சுற்று கடந்த ஆகஸ்ட் 24 மற்றும் 25ஆம் தேதிகளில் சென்னையை அடுத்து இருங்காட்டு கோட்டையில் நடைபெற்றது. நாளை நடைபெறும் பந்தயம் 2வது சுற்றுப் போட்டியாகும். 3வது சுற்றுப்போட்டி கோவையில் செப்டம்பர் 13 முதல் 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 4வது மற்றும் 5வது சுற்றுகள் அக்டோபர், நவம்பர் மாதங்களில் கோவா மற்றும் கொல்கத்தாவில் நடத்தப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.
நாளை நடைபெறும் ஃபார்முலா எப் 4 பந்தயத்தில் சென்னை டர்போ ரைடர்ஸ், கோவா ஏசஸ் ஜேஏ ரேசிங், ஸ்பீடு டெமான்ஸ் டெல்லி, பெங்களூரு ஸ்டெஸ்டர்ஸ், ஷ்ராச்சி ராஹ் பெங்கால் டைகர்ஸ், ஹைதராபாத் பிளாக்பேர்ட்ஸ், அகமதாபாத் ரேசர்ஸ், காட்ஸ்பீடு கொச்சி ஆகிய 8 அணிகள் கலந்து கொள்கின்றன. ஒரு அணிக்கு 2 வீரர்கள் வீதம் 16 பேர் கலந்து கொள்கிறார்கள். ஒவ்வொரு அணியிலும் 2 கார்கள் பயன்படுத்தப்படும்.
Under the guidance of our Honourable Chief Minister @mkstalin, We flagged-off South Asia's first #Formula4 Chennai Racing On the Street Circuit - night race at Island Grounds.
— Udhay (@Udhaystalin) August 31, 2024
Forty Racing Drivers with a the best of Formula cars on the track will be a visual delight for the… pic.twitter.com/regMeFIcew
இந்திய ரேசிங் லீக் (ஐஆர்எல்) பந்தயத்தில் 6 அணிகள் கலந்து கொள்கின்றன. ஒரு அணியில் 4 பேர் இடம் பெறுவார்கள். இதில் ஒவ்வொரு அணியிலும் தலா ஒரு வீராங்கனை இடம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 18 வீரர்கள், 6 வீராங்கனைகள் என மொத்தம் 24 பேர் கலந்து கொள்கிறார்கள். ஒவ்வொரு அணியும் 2 கார்கள் வீதம் 16 கார்களை பயன்படுத்தபடுகிறது. இந்நிலையில் நாளை போட்டியை பார்வையிட ஏராளமான பார்க்கையாளர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: ஃபார்முலா 4 கார் பந்தய பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் உயிரிழப்பு!