முல்தான்: பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள இங்கிலாந்து அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. பஞ்சாப் மாகாணத்தின் முல்தான் நகரில் நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதில் கேப்டன் ஷான் மசூத், அப்துல்லா ஷபிக் மற்றும் சல்மான் ஆகா ஆகியோரின் சதத்தின் உதவியுடன் பாகிஸ்தான அணி முதல் இன்னிங்சில் 556 ரன்களை குவித்தது. இதனை அடுத்து முதல் இன்னிங்சில் விளையாடி வரும் இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் ஜாக் கிராலி 78 ரன்களும், கேப்டன் ஆலிவ் போப் டக் அவுட்டாகியும் வெளியேறினார்.
இந்த நினைவில் அந்த அணியின் நட்சத்திர வீரரான ஜோ ரூட் தொடர்ந்து அபாரமாக விளையாடி வருகிறார். ஜோ ரூட்டின் விக்கெட்டை எடுக்க முடியாமல் பாகிஸ்தான் வீரர்கள் தடுமாறி வருகின்றனர். இந்த சூழலில் ஜோ ரூட் 167 பந்துகளில் சதம் விளாசினார். இதில் ஏழு பவுண்டரிகள் அடங்கும். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோ ரூட் 35வது சதத்தை விளாசினார்.
JOE ROOT HAS 18 TEST CENTURIES IN LAST 45 MONTHS. 🥶 pic.twitter.com/9VFMsk19dG
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 9, 2024
இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர், வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிரைன் லாரா, பாகிஸ்தானின் யூனிஸ் கான், இலங்கை வீரர் ஜெயவர்த்தனே ஆகியோரை பின்னுக்குத் தள்ளி ஜோ ரூட் தற்போது ஆறாவது இடத்தை பிடித்துள்ளார்.
அது மட்டுமில்லாமல் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த அலெஸ்டர் குக்கை ஜோ ரூட் பின்னுக்கு தள்ளி இருக்கிறார். இங்கிலாந்து முன்னாள் கேப்டன் அலஸ்டையர் குக் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 12 ஆயிரத்து 472 ரன்கள் குவித்து இருந்த நிலையில் தற்போது ஜோ ரூட் 12 ஆயிரத்து 500 ரன்களை கடந்து தொடர்ந்து சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்தி வருகிறார்.
அது மட்டும் இல்லாமல் 2024 ஆம் ஆண்டில் ஜோ ரூட் தனது ஐந்தாவது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்து இருக்கிறார். கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் ஜோ ரூட் 18 டெஸ்ட் சதம் அடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய வாழ்நாள் கிரிக்கெட்டில் 2012 இல் இருந்து 2020 வரை மொத்தமே 17 சதம் அடித்த ரூட், 2021 முதல் 2024 வரை மட்டும் 18 சதங்களை அடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேநீர் இடைவேளையை தொடர்ந்து முதல் இன்னிங்சில் விளையாடி வரும் இங்கிலாந்து அணி 90 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 441 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியில் ஜோ ரூட் 155 ரன்களும், ஹாரி ப்ரூக் 113 ரன்களும் எடுத்து தொடர்ந்து விளையாடி வருகின்றனர்.
இதையும் படிங்க: வெற்றியுடன் விடைபெற விரும்பும் வீரர்? தொடரை கைப்பற்றப்போவது யார்?