செயின்ட் லூசியா: டி20 உலகக் கோப்பையில் சூப்பர் 8 சுற்றில் இன்று வெஸ்ட் இண்டீஸ் நாட்டின் செயின்ட் லூசியாவில் உள்ள மைதானத்தில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது. வெஸ்ட் இண்டீஸ் தொடக்க ஆட்டக்காரர்கள் சார்லஸ், கிங் ஆகியோர் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினர். இருவரும் பவுண்டரி, சிக்சர்கள் என இங்கிலாந்து பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர்.
முதல் விக்கெட்டுக்கு 94 ரன்கள் சேர்த்த நிலையில், சார்லஸ் 38 ரன்களுக்கு மொயின் அலி பந்தில் அவுட்டானார். அடுத்து வந்த பவல் அதிரடியை தொடர்ந்தார். சாம் கரண் வீசிய ஒவரில் 89 மீட்டர் இமாலய சிக்சர் அடித்து மிரட்டினார். வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிங் காயம் ஏற்பட்டு ரிட்டயர்ட் ஹர்ட் ஆகி வெளியேறிய நிலையில், நட்சத்திர பேட்ஸ்மேன் பூரன் களமிறங்கினார். மறுபுறம் பவல், லிவிங்ஸ்டன் ஓவரில் ஹாட்ரிக் சிக்சர் அடித்த நிலையில், அவரது ஓவரிலேயே மார்க் வுட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். வழக்கத்திற்கு மாறாக பூரன் நிதானமாக விளையாடினார்.
பூரன் 32 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து ஜோஃப்ரா ஆர்ச்சர் பந்தில் அவுட்டானார். கடைசி ஓவரில் ரூதர்ஃபோர்ட் அதிரடி காட்டினார். வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது. கடினமான இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணி தொடக்க ஆட்டக்காரர்கள் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினர்.
இன்னிங்ஸின் 2வது ஓவரில் பட்லர் 2 பவுண்டரிகள் அடித்த நிலையில், சால்ட் தன் பங்கிற்கு சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். பின்னர் சால்ட், அல்சாரி ஜோசஃப் வீசிய 5வது ஓவரில் 14 ரன்கள் எடுத்தார். இதனைதொடர்ந்து பந்து வீச வந்த வெஸ்ட் இண்டீஸ் சுழற்பந்து வீச்சாளர் சேஸ், பட்லரை 25 ரன்களுக்கு அவுட்டாக்கினார்.
பின்னர் மொயின் அலி வந்த வேகத்தில் இரண்டு பவுண்டரிகள் அடித்து 13 ரன்களுக்கு நடையை கட்டினார். இதனைதொடர்ந்து பேர்ஸ்டோவ், சால்ட் ஜோடி ஆரம்பத்தில் கொஞ்சம் நிதானம் காட்டியது. பின்னர் இருவரும் ஆட்டத்தை இங்கிலாந்து பக்கம் திருப்பினர்.
வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களை எளிதாக கையாண்டு பவுண்டரி, சிக்சர்களாக பறக்கவிட்டனர். ஷெஃப்பர்ட் வீசிய இன்னிங்ஸின் 15வது ஓவரில் மூன்று பவுண்டரிகள், மூன்று சிக்சர்கள் என சால்ட் 30 ரன்கள் எடுத்து தனது அரைசதத்தை கடந்தார். இந்த ஜோடியின் அபாரமான ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 16 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்தது. இங்கிலாந்து அணியின் ஃபிலிப் சால்ட் அவுட்டாகாமல் 87 ரன்களும், பேர்ஸ்டோவ் 48 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.
இதையும் படிங்க: சூப்பர் 8: போட்டியை மாற்றிய அந்த ஓவர்.. தென் ஆப்பிரிக்காவிடம் போராடி தோற்ற அமெரிக்கா! - T20 World Cup 2024