டெல்லி: 17வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் தொடங்கி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரின் 56வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர் கொண்டது. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் டெல்லி அணி பேட்டிங் செய்தது.
ஜேக் ஃப்ரேசர் மெக்குர்க் மற்றும் அபிஷேக் போரல் ஆகியோர் டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இருவரும் இணைந்து ராஜஸ்தான் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். இதில் அதிரடியாக விளையாடிய, ஃப்ரேசர் மெக்குர்க் 20 பந்துகளில் 7 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என அரைசதத்தை கடந்த நிலையில் அவுட்டானார். இதனை அடுத்து களமிறங்கிய ஷாய் ஹோப் 1 ரன், அக்சர் பட்டேல் 15 ரன், ரிஷப் பண்ட் 15 ரன் என அடுத்தடுத்து அவுட்டாகினர்.
இருப்பினும் மறுபுறம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் போரல் 36 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் அஷ்வின் வீசிய பந்தில் சந்தீப் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இறுதியில் களமிறங்கிய ஸ்டப்ஸ் தன்னுடைய பங்கிற்கு 41 ரன்கள் விளாசினார். இதனை தொடர்ந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு டெல்லி கேபிடல்ஸ் 221 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் அணி தரப்பில் அஷ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதனையடுத்து 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜெய்ஸ்வால் 4 ரன்னிலும், ஜோஸ் பட்லர் 19 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன் பிறகு சஞ்சு சாம்சன் மற்றும் ரியான் பராக் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். பின்னர் ரியான் பராக் 27 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் ஒற்றை ஆளாக போராடிய கேப்டன் சஞ்சு சாம்சன் 46 பந்துகளில் 8 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் என 86 ரன்கள் குவித்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அவரைத்தொடர்ந்து ஷுபம் துபே 25 ரன்னிலும், டோனோவன் ஃபெரேரா 1 ரன்னிலும், ரவிச்சந்திரன் அஸ்வின் 2 ரன்னிலும், ரோவ்மன் பவல் 13 ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால், 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு ராஜஸ்தான் 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டெல்லி அணி, புள்ளி பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. டெல்லி கேபிடல்ஸ் அணி சார்பில் கலீல் அகமது, முகேஷ் குமார், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
இதையும் படிங்க: இந்திய அணியின் ஜெர்சியிலும் காவியா? டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி ஜெர்சி அறிமுகம்! - T20 World Cup Indian Team Jersey