டெல்லி: ஐபிஎல் தொடரின் 64வது லீக் ஆட்டம் நேற்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இரு அணிகளும் கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்கியது. டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. டெல்லி அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது.
ஜேக் ஃப்ரேசர் டக் அவுட்டானார். பின்னர் அபிஷேக் பொரேல் அதிரடியாக விளையாடினார். மறுபக்கம் ஷாய் ஹோப் பொறுமையாக ஆடினார். இருவரும் சேர்ந்து பவர் பிளேவில் 73 ரன்கள் எடுத்தனர். இரண்டாவது விக்கெட்டுக்கு 94 ரன்கள் சேர்த்த நிலையில், ஷாய் ஹோப் 38 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ரவி பிஷ்னாய் பந்தில் அவுட்டானார். 58 ரன்கள் எடுத்திருந்த பொரேல் நவீன் உல் ஹக் பந்தில் அவுட்டானார்.
பின்னர் பண்ட், ஸ்டப்ஸ் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை உயர்த்தியது. பண்ட் 33 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஹூடாவிடம் லாங் ஆன் திசையில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 20 ஒவர் முடிவில் டெல்லி அணி 208 ரன்கள் எடுத்தது. இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ அணிக்கு கேப்டன் கேஎல் ராகுல் அதிர்ச்சி அளித்தார். இஷாந்த் சர்மா பந்தில் 5 ரன்களுக்கு அவுட்டானார்.
அதேபோல் டிகாக் 12 ரன்களுக்கு சிக்ஸ் அடிக்க முயன்று இஷாந்த் சர்மா பந்தில் அவுட்டானார். இந்த சீசனில் லக்னோ அணிக்கு நம்பிக்கையாக திகழ்ந்த ஸ்டொய்னிஸ் 5 ரன்களுக்கு அவுட்டானார். தீபக் ஹூடாவும் டக் அவுட்டாக லக்னோ அணி 4 விக்கெட் இழப்பிற்கு 44 ரன்கள் எடுத்து திணறியது. பூரண் சிக்சர்களாக அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். பதோனி 6 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார்.
61 ரன்கள் எடுத்திருந்த பூரண் முகேஷ் குமார் பந்தில் அவுட்டானார். பின்னர் அர்ஷத் கான் சிக்சர்கள், பவுண்டரிகளாக விளாசினார். க்ருணல் பாண்டியா மறுமுனையில் 18 ரன்கள் எடுத்து அவுட்டானார். கடைசியாக, 20 ஓவர் முடிவில் லக்னோ அணி 189 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. டெல்லி கேப்பிடல்ஸ் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்தது.
இந்த போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் லக்னோ அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு கிட்டதட்ட முடிந்தது. மேலும் இந்த போட்டியில் டெல்லி வெற்றி பெற்றதன் மூலம் சென்னை, பெங்களூரு அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு மேலும் பிரகாசமாகி உள்ளது.
இதையும் படிங்க: ஐபிஎல் குவாலிஃபயர், இறுதிப் போட்டிக்கான டிக்கெட் புக்கிங் எப்போது? - Ipl Qualifier Match Tickets