சென்னை: இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ள ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் இந்த ஆண்டு ஜூன் 2024 டி20 உலகக் கோப்பையுடன் (T20 World Cup) முடிகிறது. இந்த நிலையில், புதிய பயிற்சியாளரை தேர்வு செய்வதற்கான அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை பிசிசிஐ (Board of Control for Cricket in India) தரப்பில் அறிவித்துள்ளது.
பிசிசிஐ நிபந்தனை: புதிதாக நியமிக்கப்படும் தலைமை பயிற்சியாளர் ஜூலை 1, 2024 முதல் டிசம்பர் 31, 2027 வரை கிட்டத்தட்ட 3.5 ஆண்டுகள் மும்பையில் இருக்க வேண்டும். அத்துடன் புதிய பயிற்சியாளராக தேர்வு செய்யப்படும் நபர் சர்வதேச அளவில் 30 டெஸ்ட் போட்டிகள் அல்லது 50 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும். சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் ஏதாவது ஒரு நாட்டின் அணிக்கு குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பயிற்சியாளராக இருந்திருக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
ஊதியம்: ஊதியத்தைப் பொறுத்தவரை ஆண்டுக்கு ரூ.10 கோடி வரை ஊதியம் வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமின்றி, வெளிநாடுகளில் போட்டி நடைபெறும் நாளொன்றுக்கு ரூ.20,814 என தினப்படியாக வழங்கப்படுகிறது.
இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்?: இந்திய கிரிக்கெட்டின் அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க கடந்த 13ஆம் தேதி முதல் பிசிசிஐ அழைப்பு விடுத்தது. அதைத் தொடர்ந்து, மே 27ஆம் தேதியுடன் காலக்கெடு முடிவடைந்த நிலையில், ஆன்லைன் கூகுள் ஃபாம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதில் பிரதமர் மோடி, அமித்ஷா, சச்சின், தோனி என பல்வேறு விளையாட்டு மற்றும் அரசியல் பிரபலங்களின் பெயர்களில் போலியான விண்ணப்பங்கள் குவிந்த சம்பவம் பிசிசிஐ-யை பெரும் குழப்பத்தில் தள்ளியது.
இதற்கிடையே, பிசிசிஐ விதித்த காலக்கெடு நிறைவடைந்த நிலையில், அடுத்த பயிற்சியாளருக்கான வாய்ப்பு கவுதம் கம்பீருக்குத்தான் கிடைக்கும் என கிரிக்கெட் வட்டாரங்கள் மூலமாக பல தகவல்கள் வெளியானது. அதற்காக கவுதம் கம்பீருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் பல தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவியது. ஆனால், தற்போது வரை எதுவும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.
பிசிசிஐ முடிவு என்ன?: நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளருமான ஸ்டீபன் பிளமிங், ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டனும், டெல்லி கேப்டன் அணியின் பயிற்சியாளருமான ரிக்கி பான்டிங், ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் மற்றும் லக்னோ அணியின் பயிற்சியாளருமான ஜஸ்டின் லாங்கர், இந்திய அணியின் முன்னாள் வீரர்களான விவிஎஸ் லட்சுமணன், கௌதம் கம்பீர் ஆகிய பெயர்களும் பரிசீலனை செய்யப்பட்டு இருப்பதாகச் செய்திகள் பரவி வருகிறது.
மேலும், ஐபிஎல் (IPL) போட்டிகளில் 5 முறை கோப்பையைத் தட்டிச் சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ஸ்டீபன் பிளமிங்யை தலைமை பயிற்சியாளர் பதவிக்கு பிசிசிஐ அணுகி இருப்பதாகத் தகவலும் வெளியாகி இருக்கிறது.
தற்போது ஸ்டீபன் பிளமிங் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகளுக்கும், இங்கிலாந்தின் தி 100 தொடரின் சதர்ன் பிரேவ் முதலிய பல்வேறு பிரான்சைஸ் டி20 அணிகளுக்கும் பயிற்சியாளராக இருந்து வருகிறார். ஆகையால், ஸ்டீபன் பிளமிங்கை இந்தியாவின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு நியமிப்பதற்காக, ஸ்டீபன் பிளமிங்கின் நெருக்கமானவர்களிடம் பிசிசிஐ தரப்பில் பேசி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.