வெஸ்ட் இண்டீஸ்: டி20 உலகக் கோப்பையில் கிங்ஸ்டவுனில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் வங்கதேசம், நேபாளம் அணிகள் மோதின. டாஸ் வென்ற நேபாளம் அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணிக்கு முதல் பந்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. தன்சித் ஹசன். கமியிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட்டானார். அடுத்த ஓவரில் ஷாண்டோ டிபேந்திரா சிங் பந்தில் போல்டானார். சற்று அதிரடி காட்டிய லிட்டன் தாஸ் 10 ரன்களில் அவுட்டானார்.
பொறுமையாக விளையாடிய ஷகிப் அல் ஹசன் 17 ரன்களுக்கு அவுட்டானார். மறுமுனையில் ஒருநாள் போட்டி போல் விளையாடிய மகமதுல்லா 13 ரன்களுக்கு அவுட்டானார். பின்னர் வந்த வங்கதேச பேட்ஸ்மேன்கள் ஓரளவு ரன்கள் சேர்க்க வங்கதேச அணி 106 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. எளிதான இலக்கை விரட்டிய நேபாளம் அணியின் 2வது ஓவரில் புர்டெல் 4 ரன்களுக்கு அவுட்டானார். பின்னர் வந்த அனில் சா டக் அவுட்டானார்.
இதனைதொடர்ந்து ஆஃசிப் ஷேக் பவுண்டரிக்களாக அடித்த நிலையில், 17 ரன்களுக்கு அவுட்டானார். இந்நிலையில் நேபாளம் அணி 26 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்து திணறியது. அப்போது ஜோடி சேர்ந்த குஷல் மல்லா(27), டிபேந்திர சிங் (23) ஓரளவு ரன்கள் சேர்த்த நிலையில் மற்ற டெயிலேண்டர்கள் அனைவரும் டக் அவுட்டாக வங்கதேச அணி 21 ரன்களில் எளிதாக வென்று சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது.
நெதர்லாந்தை வீழ்த்திய இலங்கை: அதேபோல் செயிண்ட் லூசியாவில் நடைபெற்ற மற்றொரு போட்டியில், இலங்கை, நெதர்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது. இன்னிங்ஸின் 2வது பந்திலேயே நிசங்கா டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
மற்றொரு புறம் குஷல் மெண்டீஸ் பவுண்டரிகளாக அடித்து ரன் கணக்கை உயர்த்தினார். வந்த வேகத்தில் சிக்ஸ் அடித்த கமிண்டு மெண்டீஸ் 17 ரன்களுக்கு அவுட்டானார். சற்று பொறுமையாக ஆடிய தனஞ்செயா 34 ரன்கள் எடுத்தார். அதிரடியை தொடர்ந்த குசல் மெண்டீஸ் 46 ரன்களுக்கு அவுட்டாகி அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.
பின்னர் வந்த அசலங்கா, மேத்யூஸ் (30) ஜோடி அதிரடியாக ஆடியது. அசலங்கா 46 ரன்களுக்கு அவுட்டாக பின்னர் வந்த ஹசரங்கா 6 பந்துகளில் 20 ரன்கள் எடுத்ததால் இலங்கை அணி 20 ஓவர்களுக்கு 201 ரன்கள் சேர்த்தது. இமாலய இலக்கை விரட்டிய நெதர்லாந்து அணியின் லெவிட், மாக்ஸ் ஒகொவுட் ஜோடி அதிரடியாக ஆடியது. மாக்ஸ் ஒகொவுட் 11 ரன்கள் எடுத்த நிலையில், துஷாரா பந்தில் பெவிலியன் திரும்பினார்.
அடுத்த ஓவரில் லெவிட் 31 ரன்களுக்கு அவுட்டானார். பின்னர் களமிறங்கிய எங்கள்பெரெக்ட் (11), எட்வர்ட்ஸ் (31) ஓரளவு ரன்கள் சேர்த்தனர். அடுத்து களமிறங்கிய அனைவரும் சொற்ப ரன்களில் அவுட்டாக நெதர்லாந்து அணி 118 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இலங்கை 83 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது.
இதையும் படிங்க: தோல்வியின் விளிம்பில் இருந்து பாகிஸ்தான் ஆறுதல் வெற்றி; அயர்லாந்து போராட்டம் வீண்! - T20 World Cup 2024