சென்னை: பிரான்ஸ் நாட்டில் பாரீஸில் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகிறது. இப்போட்டிகள் ஜூலை மாதம் 26ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கான தகுதி போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இன்று அதிகாலை நடைபெற்ற போட்டியில் 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்துக்கான இந்திய மகளிர், ஆண்கள் அணிகள் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்றது. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்ற இந்திய அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீரர்கள் ஆரோக்கிய ராஜீவ், சுபா வெங்கடேசன் ஆகிய இருவர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
தொடர் ஓட்ட பெண்களுக்கான 4X400 மீட்டர் பிரிவில், சுபா வெங்கடேசன், எம்.ஆர்.பூவம்மா, ஜோதிகா ஸ்ரீ தண்டி மற்றும் ரூபால் சவுத்ரி ஆகியோர் அடங்கிய இந்திய அணி, பந்தய தூரத்தை 3 நிமிடங்கள் 29.35 வினாடிகளில் கடந்து 2வது இடத்தை பிடித்தது. அதே போல் ஆண்களுக்கான 4X400 மீட்டர் பிரிவில் ஆரோக்கிய ராஜீவ், முகமது அனஸ் யாஹியா, முகமது அஜ்மல், மற்றும் அமோஜ் ஜேக்கப் ஆகியோர் அடங்கிய இந்திய அணி, 3 நிமிடங்கள் மற்றும் 3.23 வினாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து 2வது இடத்தை பிடித்தது.
ஆண்கள் பிரிவில் அமெரிக்க அணியும்,பெண்கள் பிரிவில் ஜமைக்கா அணியும் முதல் இடத்தை பிடித்தது. ஆண்கள் அணியில் ஆரோக்கிய ராஜீவ் மற்றும் பெண்கள் அணியில் இடம்பெற்றுள்ள சுபா வெங்கடேசன் ஆகியோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பாய்மரப்படகு போட்டியில் நேத்ரா குமணன் ஏற்கனவே பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் விளையாடித் தகுதிபெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.