ஐதராபாத்: இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஷிகர் இரண்டு நாட்களுக்கு முன் தனது ஓய்வு முடிவை அறிவித்தார். சர்வதேசம் மற்றும் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகுவதாக ஷிகர் தவான் அறிவித்து உள்ளார். 38 வயதான ஷிகர் தவான் 2013ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணியின் தூணாக விளங்கினார்.
நீண்ட நாட்களாக அணியில் இடம் பெற முடியாத நிலையில், ஷிகர் தவான் இந்த முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது. ஷிகர் தவானுக்கு அடுத்த படியாக பல இந்திய வீரர்கள் தங்களது ஓய்வு முடிவு குறித்து அறிவிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதில் சிலர் 2011ஆம் ஆண்டு உலக கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பிடித்தவர்கள், ஐபிஎல் கிரிக்கெட்டில் ஜொலித்து வருபவர்கள் உள்ளிடோரும் அடங்குவர்.
இளம் வீரர்கள் மீது செலுத்தப்படும் அதிகபட்ச கவனம், நீண்ட நாட்கள் இந்திய அணியில் இடம் கிடைக்காத சூழல், உடல் தகுதி பிரச்சினைகள் உள்ளிட்டவைகள் இந்த வீரர்கள் ஓய்வு குறித்து முடிவு எடுக்க காரணமாக கூறப்படுகிறது. அப்படி நீண்ட நாட்களாக அணியில் இடம் பெறாதது, மட்டும் விரைவில் ஓய்வு குறித்து முட்வு எடுக்க உள்ள வீரர்களின் உத்தேச பட்டியலை காணலாம்.
விருத்திமான் சஹா: இந்திய அணியின் எம்எஸ் தோனி ஒய்வு பெற்ற பிறகு, விக்கெட் கீப்பர் பொறுப்பை கைப்பற்றும் வாய்ப்பு விருத்திமான் சஹாவுக்கு கிடைத்தது. பல்வேறு போட்டிகளில் விருத்திமான் சஹா இந்திய அணிக்காக விக்கெட் கீப்பிங் பணியில் ஈடுபட்டார். அதன்பின் இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். கடைசியாக 2021ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் விருத்திமான் சஹா விளையாடி இருந்தார்.
39 வயதான விருத்திமான் சஹா இதுவரை 40 டெஸ்ட் மற்றும் 9 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார். கேஎஸ் பரத், இஷான் கிஷன், துருவ் ஜுரெல், ரிஷப் பன்ட் ஆகியோரின் வருகைக்கு பின்னர் இந்திய அணியில் விருத்திமான் சஹாவின் இடமானது கேள்விக் குறியானது.
இஷாந்த் சர்மா: இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முக்கியமான தூண்களில் ஒருவர் இஷாந்த் சர்மா. இதுவரை 105 டெஸ்ட், 80 ஒருநாள், 14 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ள இஷாந்த் சர்மா அதில் முறையே டெஸ்ட்டில் 311, ஒருநாளில் 115 மற்றும் டி20 கிரிக்கெட்டில் 8 விக்கெட்டுகளை விழ்த்தி உள்ளார்.
கடைசியாக 2011ஆம் ஆண்டு நியூசிலாந்து தொடரில் இஷாந்த் சர்மா விளையாடி இருந்தார். 35 வயதான் இஷாந்த் சர்மா மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிப்பது அவ்வள்வு எளிதல்ல எனக் கருதப்படுகிறது. முகமது சிராஜ், ஜஸ்பிரீத் பும்ரா, முகமது ஷமி ஆகியோரை பின்னுக்குத் தள்ளி இஷாந்த் சர்மா இந்திய அணியில் இடம் பிடிக்க வேண்டும்.
மணீஷ் பாண்டே: மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான மணீஷ் பாண்டேவின் கதையும் மற்றொரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் கருண் நாயரின் கதையும் ஏறக்குறைய ஒன்று தான். 34 வயதான மணீஷ் பாண்டே தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரிவர பயன்படுத்தி இந்திய அணியில் இடம் பிடிக்க தவறிவிட்டார் என்று தான் கூற வேண்டும்.
மணீஷ் பாண்டே இந்தியாவுக்காக 29 டெஸ்ட் மற்றும் 39 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்த காலகட்டத்தில், அவர் ஒருநாள் போட்டிகளில் 566 ரன்களும், டி20 போட்டிகளில் 709 ரன்களும் எடுத்தார். பாண்டே கடைசியாக ஜூலை 2021ஆம் ஆண்டு இந்தியாவுக்காக விளையாடினார்.
பியுஷ் சாவ்லா: 35 வயதான பியுஷ் சாவ்லா 2011ஆம் ஆண்டு உலக கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பிடித்தவர். 2012ஆம் ஆண்டு டிசம்பருக்கு பின் இந்திய அணியில் பியுஷ் சாவ்லா இடம் பெறவில்லை. பியூஷ் சாவ்லா இந்தியாவுக்காக மூன்று டெஸ்ட், 25 ஒருநாள் மற்றும் 7 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஏழு விக்கெட், ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 32 விக்கெட்டுகள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் 4 விக்கெட்டுகளையும் இதுவரை கைப்பற்றியுள்ளார். இருப்பினும் தொடர்ந்து ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பியுஷ் சாவ்லா விளையாடி வருகிறார். 2024 ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியில் அவர் இடம் பிடித்து இருந்தார்.
அமித் மிஸ்ரா: 41 வயதான அமித் மிஸ்ரா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து இதுவரை எந்தவித அறிவிப்பையும் அவர் வெளியிடவில்லை. கடைசியாக 2017ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியில் அமித் மிஸ்ரா இடம் பெற்று இருந்தார். 22 டெஸ்ட், 36 ஒருநாள், 10 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ள அமித் மிஸ்ரா இதுவரை 156 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் அமித் மிஸ்ரா அங்கம் வகித்தார்.
புவனேஷ்வர் குமார்: கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய அணியில் இடம் பிடிக்க முடியாமல் புனவேஷ்வர் குமார் திணறி வருகிறார். 2013ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான புவனேஷ்வர் குமார் கடைசியாக 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய அணிக்காக விளையாடி இருந்தார். 34 வயதான புவனேஷ்வர் குமார் இந்திய அணிக்காக 21 டெஸ்ட், 121 ஒருநாள் மற்றும் 87 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 294 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். இந்திய அணியில் இளம் பந்துவீச்சாளர்களின் வருகைக்கு பின் புவனேஷ்வர் குமாரின் இருப்பிடம் கேள்விக்குறியானது.
கருண் நாயர்: டெஸ்ட் கிரிக்கெட்டில் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் விரேந்தர் சேவாக்கிற்கு பின் முச்சதம் அடித்த ஒரே வீரர் கருண் நாயர். முச்சதம் அடித்த போதிலும் இந்திய அணியில் அவரது இருப்பிடம் தொடர்ந்து கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. கடந்த 2017ஆம் ஆண்டு கடைசியாக சர்வ்தேச கிரிக்கெட்டில் விளையாடிய கருண் நாயர், மொத்தம் 6 டெஸ்ட் மற்றும் 2 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார். தொடர்ந்து முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் கருண் நாயர், இனி இந்திய அணியில் இடம் பெறுவது கேள்விக்குறியாகவே உள்ளது.
ரிஷி தவான்: இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த ஆல் ரவுண்டர் ரிஷி தவான் கடைசியாக 2016ஆம் ஆண்டு இந்திய அணிக்காக விளையாடினார். இதுவரை மூன்று ஒருநாள் மற்றும் 1 டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடி உள்ள ரிஷி தவான், அதில் ஒரேயொரு விக்கெட் மட்டுமே எடுத்துள்ளார்.
மொகித் சர்மா: வேகப்பந்து வீச்சாளர் மொகித் சர்மா இதுவரை இந்திய அணிக்காக 26 ஒருநாள் மற்றும் 8 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 31 விக்கெட்டுகளும் டி20 கிரிக்கெட்டில் 6 விக்கெட்டுகளும் வீழ்த்தி உள்ளார். 35 வயதான மொகித் சர்மா கடைசியாக 2015ஆம் ஆண்டு இந்திய அணியில் விளையாடினார். ஐபிஎல் கிரிக்கெட்டில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
உமேஷ் யாதவ்: கடைசியாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் விளையாடிய உமேஷ் யாதவ் அதன்பின் இந்திய அணியின் இடம் பிடிக்க முடியாமல் திணறி வருகிறார். உமேஷ் யாதவ் இதுவரை 57 டெஸ்ட், 75 ஒருநாள், 9 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 170 விக்கெட்டுகளை உள்ளார். மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் 106 விக்கெட்டுகளும், டி20 போட்டிகளில் 12 விக்கெட்டுகளும் வீழ்த்தி உள்ளார்.
ஜெயந்த் யாதவ்: சுழற்பந்து வீச்சாளர் ஜெயந்த் யாதவ் இந்தியாவுக்காக 6 டெஸ்ட் மற்றும் இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். ஜெயந்த் 16 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, டெஸ்ட் கிரிக்கெட்டில் 248 ரன்கள் எடுத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 34 வயதான ஜெயந்த் கடைசியாக 2022 மார்ச் மாதம் இந்தியா அணிக்காக விளையாடினார்.
இதையும் படிங்க: சரத் கமலின் அதிரடி ஆட்டத்தால் டெல்லியை வீழ்த்தி சென்னை அணி த்ரில் வெற்றி! - Ultimate Table Tennis