சென்னை: உலகம் முழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் 33-ஆவது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வரும் 26-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 32 விளையாட்டுக்களில் 329 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் பல்வேறு நாடுகளில் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர்.
117 வீரர்கள் அடங்கிய இந்திய அணி: இதில் இந்தியாவின் சார்பாக மொத்தம் 16 பிரிவுகளில் 117 இந்திய வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். ஒலிம்பிக் தடகளத்தில் இந்தியாவில் இருந்து 18 வீரர்கள், 11 வீராங்கனைகள் உட்பட மொத்தம் 29 பேர் பங்கேற்க உள்ளனர்.
இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம்: தடகளத்தில், கடந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா இம்முறை இந்தியாவை வழிநடத்தவுள்ளார். நடப்பு சாம்பியனான நீரஜ் சோப்ரா மீது ரசிகர்களிடையே அதீத எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
தமிழக தடகள வீரர்கள்: ஒலிம்பிக்கிற்கான இந்திய தடகள அணியில், குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த பிரவீன் சித்திரவேல், சந்தோஷ் தமிழரசன், ராஜேஷ் ரமேஷ், சுபா வெங்கடேசன், வித்யா ராம்ராஜ் ஆகிய 5 வீரர்களும், ஆசிய விளையாட்டு சாம்பியன்களான அவினாஷ் சேபிள், தஜிந்தர்பால் சிங் தூர், ஜோரி யார்ராஜி ஆகியோரும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
ஒலிம்பிக் தடகளத்தில் இந்தியாவின் பங்களிப்பு: ஒலிம்பிக் வரலாற்றில் தடகள போட்டிகளில் இந்தியா இதுவரை 3 பதக்கங்களை வென்றுள்ளது. 1900ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த நார்மன் பிரிட்சார்ட் 200 மீட்டர் ஓட்டம் மற்றும் 200 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம் ஆகிய பிரிவுகளில் வெள்ளிப்பதக்கத்தைக் கைப்பற்றினார்.
120 வருட கனவை நினைவாக்கிய நீரஜ் சோப்ரா: அதன் பின்னர் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளார். இவர் 87.58 மீட்டர் தொலைவில் ஈட்டியை எறிந்து தங்கப்பதக்கம் வென்று சாதனைப் படைத்தார். இதன் மூலம் 120 வருடங்களுக்கு பிறகு தடகளத்தில் அடுத்த பதக்கத்தை இந்தியா வென்றது.
இந்திய தடகள அணி விபரம்:
இந்திய தடகள அணி விவரம் (ஆண்கள் பிரிவு)
- அவினாஷ் சேபிள் (3,000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ்)
- நீரஜ் சோப்ரா, கிஷோர் குமார் ஜெனா (ஈட்டி எறிதல்)
- தஜிந்தர்பால் சிங் தூர் (குண்டு எறிதல்)
- பிரவீன் சித்திரவேல், அபுல்லா அபூபக்கர் (டிரிபிள் ஜம்ப் )
- அக்ஷ்தீப் சிங், விகாஷ் சிங், பரம்ஜீத் சிங் பிஷ்ட் (20 கி.மீ. பந்தய நடை)
- முஹம்மது அனஸ், முஹம்மது அஜ்மல், அமோஜ் ஜேக்கப், சந்தோஷ் தமிழரசன், ராஜேஷ் ரமேஷ் (4x400 மீ தொடர் ஓட்டம்)
- மிஜோ சாக்கோ குரியன் (4x400 மீட்டர் தொடர் ஓட்டம்)
- சூரஜ் பன்வார் (பந்தய நடை கலப்பு மாரத்தான்)
- சர்வேஷ் அனில் குஷாரே (உயரம் தாண்டுதல்)
(பெண்கள் பிரிவு)
- கிரண் பஹால் (400 மீட்டர்)
- பருல் சவுத்ரி (3,000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ் மற்றும் 5000 மீட்டர்)
- ஜோதி யார்ராஜி (100 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டம்)
- அன்னு ராணி (ஈட்டி எறிதல்)
- அபா கதுவா (குண்டு எறிதல்)
- ஜோதிகா ஸ்ரீ தண்டி, சுபா வெங்கடேசன், வித்யா ராம்ராஜ், பூவம்மா எம்ஆர்,பிராச்சி (4X400 மீட்டர் தொடர் ஓட்டம்)
- பிரியங்கா கோஸ்வாமி (20 கிமீ நடை பந்தயம் / பந்தய நடை கலப்பு மாரத்தான்)
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: முதல்முறை ஒலிம்பிக்கிலேயே இந்திய அணிக்கு தலைமை தாங்கும் பிரித்திவிராஜ் தொண்டைமான்.. பதக்க அறுவடை தொடருமா?