திருநெல்வேலி: தென் மாவட்டங்களில் உள்ள பழமையான சிவாலயங்களில் ஒன்றாகத் திகழ்கிறது நெல்லை மாவட்டத்தில் உள்ள உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோயில். இக்கோயிலில். கடந்த 17ஆம் தேதி தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் தினசரி காலை உதய மார்த்தாண்ட பூஜை, சிறப்பு அலங்கார பூஜை, விநாயகர் வீதி உலா, சுவாமி சந்திரசேகரன், மனோன்மேனி அம்பிகை சமேதராக தினம் ஒரு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் காட்சி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட நிகழ்ச்சியை இன்று (ஜன.25) காலை நடைபெற்றது. இதில் தமிழக சபாநாயகர் அப்பாவு திருத்தேருக்குப் பூக்கள் தூவியும், வடம் பிடித்தும் தொடங்கி வைத்தார். முன்னதாக சந்திரசேகரன் சுவாமி மனோன்மணி அம்பிகைக்குச் சுயம்புலிங்க சுவாமி ஆலயத்தில் சிறப்பு அபிஷேகங்களும், அலங்கார தீபாராதனையுடன் சிறப்புப் பூஜையும் நடைபெற்றது.
இதையும் படிங்க: தைப்பூசத் திருவிழா.. பழனியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கைகளில் சூடம் ஏந்தி சூரிய பகவான் தரிசனம்!
தொடர்ந்து, மேளதாளம் முழங்க, முத்துக்குடையுடன் சந்திரசேகரன் சுவாமி மனோன்மணி அம்பிகை சப்பரத்தில் எழுந்தருளி, முத்துக்குடையுடன் தேருக்கு வீதி உலாவாக வந்தனர். பின்பு, தேரில் சிறப்புத் தீபாராதனையுடன் ரதோ உற்சவம் எனும் தேரோட்டம் தொடங்கியது. அப்போது, பக்தர்களின் ஓம் நமச்சிவாய... சிவாய நம... என்கிற பக்தி கோஷங்கள் விண்ணை முட்டத் தேர் ரதவீதிகளில் பவனி வந்தது.
இந்த தேரோட்டத்தில் பங்கேற்க, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தைப்பூச திருவிழா தேரோட்டத்தைக் கண்டு தரிசனம் செய்ய வந்தனர். மேலும், வள்ளியூர் டிஎஸ்பி யோகேஷ் குமார் தலைமையில் 200க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மேலும், தேர் செல்லும் வழிகளில் பாதிப்படையும் மின் கம்பிகளை உடனுக்குடன் சீரமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில், பக்தர்களின் வசதிக்காகச் சுற்றுவட்டார ஊர்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
இதையும் படிங்க: வடலூரில் 153வது ஜோதி தரிசன பெருவிழா: 7 திரைகளை நீக்கி ஒளிர்ந்த ஜோதியை தரிசித்த பக்தர்கள்!