மதுரை: பழமையும், பெருமையும் நிறைந்த மதுரை மாநகருக்கு பல்வேறு சிறப்புகள் இருந்தாலும், மீனாட்சி அரசாலும் பூமி என்பது கூடுதல் சிறப்பு. திருவிழாவிற்கு பஞ்சமே இல்லாத மதுரையில், மாநகரே கோலாகலமாகக் கொண்டாடும் சித்திரை திருவிழா உலகப் புகழ்பெற்ற ஒன்றாகும். அந்தவகையில், இந்த ஆண்டு சித்திரை திருவிழா ஏப்ரல் 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சித்திரை திருவிழாவையொட்டி, ஒவ்வொரு நாளும் மீனாட்சி, பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இந்நிலையில், மதுரையில் அரசாளும் மீனாட்சியம்மன் ஆட்சிப் பொறுப்பேற்கும் விதமாக, நேற்றைய முன்தினம் மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது.
பட்டாபிஷேகம் நடைபெற்ற நாள் முதல் ஆடி மாதம் வரை, நான்கு மாதங்கள் 'மதுரையில் அன்னை மீனாட்சியின் ஆட்சி' நடைபெறும் என்பது ஐதீகம். இதைத்தொடர்ந்து, சிவபெருமானை மீனாட்சி அம்மன் போருக்கு அழைக்கும் நிகழ்வான 'திக் விஜயம்' நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றது.
இந்நிலையில், மதுரை மக்கள் கொண்டாடித் தீர்க்கும் சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் கோலாகலமாக நடைபெறவுள்ளது. இந்த திருக்கல்யாணத்தை கண்ணார தரிசிப்பவர்களுக்கு திருமணத் தடைகள் நீங்கி திருமண யோகமும், நிறைவான வாழ்க்கையும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இந்த திருக்கல்யாண நிகழ்வுக்காக, மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருமணம் நடைபெறும் திருமண மேடை, சுமார் 10 டன் எடை கொண்ட பல வண்ண பூக்களால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு உள்ளது. அதோடு, வண்ண பட்டு துணிகளால் மேடை அழகூட்டப்பட்டு காட்சியளிக்கிறது. இந்நிலையில், பக்தர்கள் திருக்கல்யாணத்தை காண்பதற்கு வசதியாக மேற்கு மற்றும் வடக்கு ஆடி வீதிகளில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது.
மேலும், சித்திரை வீதிகள் உள்ளிட்ட 20 இடங்களில், பொதுமக்கள் திருக்கல்யாண காட்சிகளைக் காண வசதியாக பெரிய எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. திருக்கல்யாணம் முடிந்தப் பின், மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தம்பதி கோலத்தில் பழைய மண்டபத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சி அளிப்பர். மேலும், மாலையில் மீனாட்சி அம்மன் பூப்பல்லக்கிலும், சுந்தரேஸ்வரர் யானை வாகனத்திலும் வீதி உலா வருவர்.
இதைத் தொடர்ந்து, நாளை தேர் உற்சவமும், செவ்வாய்க்கிழமை கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளலும் நடைபெறும். சித்திரை திருவிழாவால் மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ள சூழ்நிலையில், மதுரை மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை ஒட்டி, மாநகர் முழுவதும் பலத்த போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மதுரை மீனாட்சிக்கு பட்டாபிஷேகம் - இன்று தொடங்கி ஆடி வரை அம்மனின் அரசாட்சி.. - Meenakshi Amman Pattabhishekam