இஸ்லாமியர்களின் புனித மாதமாக கருதும் ரமலான் கடந்த திங்கட்கிழமை மாலை பிறை பார்க்கப்பட்டு, செவ்வாய்கிழமை(12.03.2024) முதல் உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்கள் தங்களது விரதத்தை தொடங்கியுள்ளனர். ரமலான் மாதம் என்றாலே பல்வேறு பகுதிகளில், அந்தந்த கலாச்சாரத்திற்கு ஏற்ப பலவகையான உணவுகள் பிரபலமாவது உண்டு. இன்னும் குறிப்பாக, அத்தகைய உணவுகள் ரமலான் மாதத்தில் மட்டுமே கிடைக்க கூடியதாக இருக்கும்.
அப்படி தமிழகத்தில் பிரபலமான ஓர் உணவு தான் நோன்பு கஞ்சி. தமிழக மக்களை பொறுத்தவரை நோன்பு கஞ்சி ஒரு உணவு என்பதை கடந்து மக்களின் உணர்வோடு இணைந்த ஒன்று என்று கூறலாம். ரமலான் மாதத்தில் பள்ளிவாசல்களில் கிடைக்கும் இந்த நோன்பு கஞ்சி இஸ்லாமியர்களையும் மற்ற மக்களையும் அன்பால் இணைக்க கூடிய ஒன்றாக திகழ்கிறது.
இந்த நோன்பு கஞ்சி சமைக்க தேவைப்படும் பொருட்கள் எளிமையானவையே. அதனை சரியான முறையில் சமைத்தால் மிகவும் பிரமாதமான சுவையில் இருக்கும். விரதம் இருப்பவர்கள் நாள் முழுவதும் சாப்பிடாமல் இருந்து, பிறகு மாலையில் தங்களது விரதத்தை முடித்துக் கொண்டு சாப்பிடுவதால் இந்த நோன்பு கஞ்சியில் மிகவும் குறைந்த அளவிலான மசாலாக்கள் மட்டுமே சேர்க்கப்படுகின்றன.
மேலும், இரண்டு முறையில் நோன்பு கஞ்சியை எளிமையாக வீட்டிலே செய்யலாம். ஒன்று பிரஷர் குக்கர், மற்றொன்று எண்ணெய் இல்லாமலும் செய்யலாம். ஆனால், இரண்டு முறைக்கும் தேவைப்படும் பொருட்கள் ஒன்று தான். அவை, குறுணை பச்சரிசி, பாசிப் பருப்பு, வெங்காயம், தக்காளி, பூண்டு, பச்சைமிளகாய், புதினா, இஞ்சி பூண்டு விழுது, இலங்கபட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, மிளகு, கரம் மசாலா, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர்.
பிரஷர் குக்கர் முறை: ஒரு டம்ளர் குறுணை அரிசி, அதன் கால் பங்கு அளவிற்கு பாசிப் பருப்புடன் சேர்த்து இவை இரண்டையும் நன்றாக கழுவி ஊர வைக்க வேண்டும். பின்னர், ஒரு பிரஷர் குக்கரில் சிறிதளவு எண்ணெய் அல்லது நெய் சேர்த்து, அதனுடன் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, மிளகு ஆகியவை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அதனுடன் நறுக்கிய 2 பெரிய வெங்காயம், 1 அல்லது 2 பச்சை மிளகாய், 3 அல்லது 4 பற்கள் பூண்டு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்னர், அதனுடன் 1 டீஸ் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி, நறுக்கிய ஒரு சிறிய தக்காளி சேர்த்து தக்காளி வேகும் வரை வதக்கி கொள்ள வேண்டும்.
தக்காளி நன்றாக வதங்கிய பிறகு, அதில் தேவையான அளவு உப்பு, கரம் மசாலா சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஊர வைத்திருக்கும் அரிசி மற்றும் பாசிப்பருப்பை அதனுடன் சேர்த்து பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, 3 அல்லது 4 விசில் விடவேண்டும். பிறகு பிர்ஷர் குக்கரை திறந்து அனைத்தையும் ஓரளவுக்கு மசித்து விட்டு, பிறகு கஞ்சி பதத்திற்கு ஏற்றவாறு தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டால் போதும் அருமையான சுவையோடு மணமணக்கும் நோன்பு கஞ்சி தயாராகிவிடும் இதனை சமோசா அல்லது மசால் வடையுடன் சேர்த்து சாப்பிட்டால் கூடுதல் சுவையாக இருக்கும்.
எண்ணெய் இல்லாத முறை: பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து, நன்கு கொதித்த பிறகு, ஏற்கனவே மேலே சொன்ன நோன்பு கஞ்சிக்கு தேவைப்படும் பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து கொதிக்க விட்ட பிறகு கொஞ்சம் தேங்காய் பால் சேர்த்து கஞ்சி பதத்தில் இறக்கிவிட்டு அதில் புதினா மற்றும் கொத்தமல்லியை தூவினால் சுவையான நோன்பு கஞ்சி ரெடி.
பின் குறிப்பு: இதில் தேங்காய் பால் என்பது கட்டாயம் அவசியமல்ல விரும்புவோர் மட்டும் சேர்த்துகொள்ளலாம்
இதையும் படிங்க: இயற்கையான உணவுகளின் மூலம் சுவாச நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க முடியும் - எப்படித் தெரியுமா?