ஹைதராபாத்: இந்திய ராணுவத்தின் மீதும் ஜம்மு பிராந்தியத்தில் உள்ள அதன் ராணுவ முகாம்களின் மீதும் பயங்கரவாத தாக்குதல் திடீரென அதிகரித்திருப்பது பாகிஸ்தான் மற்றும் சீனாவுடனான எல்லைப் பாதுகாப்பு குறித்த ஸ்திரத்தன்மையில் எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்வியை அரசியல் வல்லுநர்கள் எழுப்புகின்றனர். அத்துடன் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறுவதாக உள்ள ஜம்மு காஷ்மீர் மாநில சட்டப்பேரவைத் தேர்தலிலும் இத்தாக்குதல்கள் எவ்வித பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கேள்வியையும் அவர்கள் முன்வைக்கின்றனர்.
அதிகரிக்கும் சுற்றுலா: காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துவரும் இந்த வேளையில், பயங்கரவாத தாக்குதல்களும் அதிகரித்த வண்ணம் உள்ளன. இத்தாக்குதல்களில் முக்கியமாக, ஜூன் 9 தேதி நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக மூன்றாவது முறை பொறுப்பேற்ற அதே நேரத்தில், ஜம்முவில் கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல் அரங்கேறியது. அன்றைய தினம், ஜம்மு மாவட்டம், ரியாசி நகர் பகுதியில், பள்ளத்தாக்கில் விழுந்த பயணிகள் பேருந்து மீது பயங்கரவாதிகள் ஈவிரக்கமற்ற தூப்பாக்கிச் சூடு நடத்தினர்.
ஆனாலும் அங்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதி கொண்டுதான் உள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து, பாதுகாப்புப் படையினரை குறிவைத்து பல்வேறு பகுதிகளில் தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக பல ஆண்டுகளாக அமைதி பூங்காவாக இருந்துவந்த தோடா, கதுவா, ரியாசி ஆகிய ஜம்மு பகுதிகளில் தற்போது துப்பாக்கி சப்தம் அதிகம் கேட்டு வருகிறது. பயங்கரவாத தாக்குதல்களால் தற்போது உயிரிழப்புகளும் இப்பகுதிகளில் அதிகம் நிகழ்ந்து வருகின்றன. பயங்கரவாதிகளின் பார்வை காஷ்மீரில் இருந்து ஜம்முவுக்கு திரும்பியுள்ளதையே இத்தாக்குதல் சம்பவங்கள் உணர்த்துகின்றன.
லடாக்கின் மீது கவனம்: லடாக்கின் கல்வான் பகுதியில், கடந்த 2020 ஆம் ஆண்டு, சீன ராணுவ குழுவுடன் நேர்ந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். சீன ராணுவத்தின் அராஜகமான இத்தாக்குதலுக்கு இந்திய தரப்பில் தக்க பதிலடி அளிக்கப்பட்டது. அத்துடன், இச்சம்பவத்துக்கு பிறகு சீன ராணுவத்தின் ஊடுருவலை தடுக்க, லடாக் எல்லைப் பகுதியில் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதன் காரணமாக, குறிப்பிடத்தக்க அளவிலான ராணுவ துருப்புகள் ஜம்மு பகுதியில் இருந்து லடாக் எல்லைக்கு அனுப்பப்பட்டன. இந்த சூழலை பயன்படுத்தி கொண்ட பயங்கரவாதிகள், ஜம்மு பகுதியில் மெல்ல மெல்ல தங்களது கையை ஓங்க செய்துள்ளனர்.
பயங்கரவாதிகள் நவீன ஆயுதங்களை கொண்டே இந்திய ராணுவத்தின் மீதான தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர். அத்துடன் அவர்களிடம் ஆயுத தளவாடங்களும் இருக்கே செய்கின்றன. இவையெல்லாம் பெரும்பாலான பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருந்துதான் ஊடுருவி இருக்கக்கூடும் என்பதை ஊர்ஜிதப்படுத்தும் விதத்தில் உள்ளன. அவர்களுக்கு பாகிஸ்தான் அல்லது சீனா தான் ஆயுத உதவிகளை வழங்க வேண்டும். இல்லையெனில், அவர்களால் இந்திய ராணுவத்தை எதிர்க்கும் அளவுக்கு தைரியம் வராது என்பதே வல்லுநர்களின் பார்வையாக உள்ளது.
பயங்கரவாதத்துக்கு என்ன காரணம்?: பாகிஸ்தான் நாடும், அந்நாட்டு அரசும் பொருளாதார சிக்கலில் சிக்கித்தவித்து கொண்டிருக்கும்போது, அந்நாட்டின் ராணுவத்துக்கு இந்த வேண்டாத வேலை தேவையா என்ற கேள்வி பரவலாக முன்வைக்கப்படுகிறது. இதற்கு, ஜம்மு -காஷ்மீருக்கு சிறப்பு மாநில அந்தஸ்தை அளித்துவந்த 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டதை இன்றளவும் எதிர்த்துவரும் தீவிரவாதிகள் தங்களை ஆதரிக்கின்றனர் என்பதை காட்டவே பாகிஸ்தான் அவர்களுக்கு ஆயுத உதவி செய்யக்கூடும் என்கிறது ராணுவ வட்டாரம்.
ஜம்முவில் ஒலிக்கும் பயங்தரவாதிகளின் துப்பாக்கி சப்தம், இயற்கை எழில் கொஞ்சம் காஷ்மீர் பள்ளத்தாக்கை நாடிவரும் சுற்றுலா பயணிகளை கொஞ்சமும் அச்சுறுத்தவில்லை என்பது தான் இதில் வியக்கத்தக்க விஷயம். சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பதால் தற்போது ஸ்ரீநகரில் மட்டுமின்றி, காஷ்மீர் பள்ளத்தாக்கிலும் தங்கும் விடுதிகளுக்கு கடும் கிராக்கி தான். அதிர்ஷ்டவசமாக தான் சுற்றுலாவாசிகளுக்கு அங்கு தங்கும் அறைகள் கிடைக்கின்றன. அதுவும் சாதாரண அறைக்கான வாடகையே நட்சத்திர விடுதிக்கு இணையாக வசூலிக்கப்படுகிறது. இதேபோன்று, மாஸ்கோவின் சிவப்பு சதுக்கத்துக்கு பிறகு, உலகின் பிரபலமான சந்தையாக கருதப்படும் லால் சவுக்கில், ஹிந்தி, குஜராத்தி, மராத்தி, வங்காளம் என பல்வேறு மொழிகளை பேசும் சுற்றுலா பயணிகளையும், அவர்கள் கடைக்காரர்களிடம் பொருட்களை பேரம்பேசி வாங்குவதை கேட்க முடிகிறது. ஜம்மு - காஷ்மீருக்கான 370 சட்டப்பிரிவை நீக்கிய பிறகு, அங்கு இயல்பு நிலை திரும்பி வருவதற்கும், மத்திய அரசு கூறியப்படி, புதிய காஷ்மீர் உருவாகி வருவதற்கும் (நயா காஷ்மீர்) இவையெல்லாம் அடையாளங்கள் இல்லையா?
பள்ளத்தாக்கில் ஒலிக்கும் "ஹர ஹர மஹாதேவா": சுற்றுலா பயணிகளின் வருகையை போலவே, பள்ளத்தாக்கில் முஸ்லிம்களின் நகரம் என்று சொல்லப்படும் ஊர் ஒன்றில், காலை வேளைகளில் இப்போதெல்லாம் "ஹர ஹர மஹாதேவா" எனும் முழ:க்கம் ஒலிப்பதை கேட்க முடிகிறது. இது பல ஆண்டுகளாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் குடியேறியதாக அறியப்படும் பண்டிட்டுகளின் முழக்கமாகவே தெரிகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு,வபரை தலைநகர் ஸ்ரீநகரில் கூட இது சாத்தியமில்லை. ஆனால் தற்போது, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகைபுரியும் சுற்றுலா பயணிகள் மற்றும் ராணுவத்தின் பாதுகாப்பு காரணமாக, காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஹர ஹர மஹாதேவா கோஷம் சாத்தியமாகி உள்ளது.
காஷ்மீரில் சுற்றுலா தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களிடம் பேசும்போது, அங்கு எல்லோரும் இத்தொழிலை வைத்து பணம் சம்பாதிப்பது போன்ற புரிதல் ஏற்படுகிறது. ஆனால், உள்ளூர் காஷ்மீரிவாசிகளின் நிலை இன்றும் பரிதாபகரமாகவே உள்ளது. அவர்களுக்கு தங்களின் நண்பன் யார், எதிரி யார் என்று இன்றும் உறுதியாக சொல்ல இயலவில்லை. " எங்களின் பிரச்னைகளை கேட்டறிந்து, அவற்றை களைவதற்கு அரசியல் பிரதிநிதிகள் இல்லை" என்று வருந்தும் சால்வை விற்கும் உள்ளூர் வியாபாரி ஒருவர், "உள்ளூர்வாசிகளின் ஆதரவுடன் இன்னும் இங்கு பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கிறார்கள் என்றால், அதற்கு காரணம் இருக்கதான் செய்கிறது" என்கிறார் வேதனையுடன் அவர்.
பயங்கரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்குமா தேர்தல்?: இவரை போன்ற காஷ்மீரிகளின் ஏக்கத்தை போக்கும் விதத்தில், 10 ஆண்டு கால ஆளுநர் ஆட்சிக்கு பிறகு, ஜம்மு -காஷ்மீர் மாநில சட்டமன்றத்துக்கு தேர்தல் நடத்த வேண்டிய தேவை உள்ளது. ஆனால் வன்முறை, பயங்கரவாதம் மீண்டும் தலைத்தூக்கிவரும் நிலையில், தேர்தல் நடத்தப்பட்டால் அது வேறுவிதமான காஷ்மீராக அமையக்கூடும். அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், மாநிிலத்தின் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவராக கருதப்படும் ஓமர் அப்துல்லா, சிறையில் உள்ள இன்ஜினியர் ரஷித் என்பவரிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இத்தகைய சூழலில் அங்கு சட்டமன்றத் தேர்தல் நடத்தப்பட்டால், அது இன்ஜினியர் ரஷித் போன்றவர்கள் ஆட்சி,அதிகாரத்துக்கு வர வாய்ப்பாக அமையக்கூடும். அது மாநிலத்தில் தற்போதுள்ள அதிகார சமநிலையை மாற்றிவிடக்கூடும்.
உள்ளூர் காஷ்மீரிகள் அல்லது ஊடுருவல்காரர்களால் நிகழும் வன்முறை, பயங்கரவாதம், ஜம்மு -காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலை வெற்றிகரமாக நடத்துவதன் மூலம் முடிவுக்கு வருமா என்பதே தற்போது எழுந்துள்ள மிகப்பெரிய கேள்வி.
கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்த கருத்துகளே.
இதையும் படிங்க:சமூகத்தின் கழுத்தை நெரிக்கும் 'நான் கடவுள்' ஆசாமிகள் - களைவது எப்படி?