ஹைதராபாத்: ஒவ்வொரு 30 வருடங்களுக்கும் சமூகத்தில் ஒரு தலைமுறை மாறுகிறது. அவர்களின் சிந்தனை முறை மாறுகிறது. சினிமாக்காரர்கள் அதை ஒரு போக்கு என்கிறார்கள். இதைப் புரிந்துகொண்டு இந்த தலைமுறை மாற்றத்தை ஏற்படுத்துபவர்கள் 'டிரெண்ட்செட்டர்கள்' என்று வர்ணிக்கப்படுகிறார்கள். புதிய சிந்தனைகளை முன்னெடுத்துச் செல்பவர்கள் சமூகத்துக்கு ஒளிபாய்ச்சுபவர்களாக அழைக்கப்படுகிறார்கள். இந்த கூற்றுகளின்படி தெலுங்கு மொழி பத்திரிகை உலகில் ஒளிவிளக்காக திகழ்கிறது 'ஈநாடு'. 50 ஆண்டுகளுக்கு முன் 4,500 பிரதிகளுடன் தொடங்கப்பட்ட ஈநாடு பத்திரிக்கை, இன்று 13 லட்சத்துக்கும் அதிகமான பிரதிகளுடன் நம்பர் ஒன் தெலுங்கு நாளிதழ் என்ற பெருமையுடன் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. ஆகஸ்ட் 10, 2024 அன்று, 'ஈநாடு' தமது நீண்ட பயணத்தில் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
ஆகஸ்ட் 10, 1974. விசாகப்பட்டினத்தின் சீதம்மதாரா பகுதியில் ஒரு மூடிய கொட்டகையில் இருந்து அச்சிடப்பட்ட வார்த்தையின் ஓசை கேட்டது. அப்போது அங்கு இருந்து என்ன நடக்கும் என்று உலகிற்கு புரியவில்லை. ஆனால் அச்சில் ஏற்பட்ட 'ஈநாடு' என்ற அந்த தெலுங்கு மந்திர வார்த்தை விரைவில் தகவல் புரட்சியின் முகவரியாக மாறியது. இருளின் திரைகளை கிழித்துக்கொண்டு 'ஈநாடு' தினமும் காலையில் வாசகர்களுக்குப் பலதரப்பட்ட செய்திகளை தர தொடங்கியது. ஒரு பிராந்திய செய்தித்தாளாக தனது பயணத்தை தொடங்கிய ஈநாடு, விரைவில் பல லட்சம் பிரதிகள் விற்பனையை கடந்து சாதனை படைத்தது. தற்போது அதன் பொன்விழாவை பெருமையுடன் கொண்டாடுகிறது.
“50 வருட ஈநாடு பயணத்தில் பங்கு கொண்டு 35 வருடங்கள் இந்நிறுவனத்தில் பொறுப்புடன் பணியாற்றுவது பெருமைக்குரிய விஷயம். எங்கள் தலைவர் (ராமோஜி) நிறுவனத்தில் ஏற்படுத்திய ஒழுக்கத்தால் இது சாத்தியமானது. ஏனென்றால், அந்த அமைப்பில் உள்ள மற்றவர்களைப் போலவே எனக்கும் அதே ஒழுக்கம் இருக்கிறது, அதனால்தான் இந்தப் பயணம் தொடர்கிறது" என்று பெருமிதத்துடன் கூறுகிறார் ஈநாடு நிர்வாக இயக்குநர் கிரண்.
வார்த்தைகளின் மந்திரவாதி ராமோஜி ராவ்!
ராமோஜி ராவுக்கு ஆரம்பத்தில் பத்திரிகை தொடங்கும் எண்ணமே இல்லை. ஆனால் அவருக்கு விளம்பரத் துறையில் பணியாற்றிய டி.ராமச்சந்திர ராவ் என்பவரின் அறிமுகம் இருந்தது. அவரைப் பார்த்த ராமோஜி ராவ் விளம்பரம் தொடர்பான நுட்பங்களைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டினார். படிப்பை முடித்த அவர், டெல்லியில் உள்ள ஒரு விளம்பர நிறுவனத்தில் கலைஞராக சேர்ந்தார். மூன்று வருடங்கள் அங்கு வேலை பார்த்துவிட்டு மீண்டும் ஹைதராபாத் திரும்பினார். அந்த நாட்களில், கோயங்காவின் 'ஆந்திர பிரபா' தெலுங்கு ஊடக உலகில் அதிக ஆதிக்கம் செலுத்தி வந்தது. அதே நேரத்தில் தெலுங்கு நபர்களால் நிறுவப்பட்ட செய்தித்தாள்கள் அடுத்த நிலைகளில் இருந்தன. அத்தகைய சூழலில்தான், தெலுங்கு நாளிதழ்கள் ஏன் தெலுங்கு மண்ணில் பின்தங்க வேண்டும்? என்ற ஒற்றை கேள்வி ராமோஜியின் மனதில் எழுந்தது. இக்கேள்விக்கான விடையாய் தினசரி செய்தித்தாள் நிறுவும் எண்ணம் அவருக்கு முளைத்தது.
நீங்கள் ஒரு பத்திரிகையைத் தொடங்கினால், அதை எங்கு தொடங்குவது? அதை எப்படி தொடங்குவது? அப்போது தெலுங்கு நாளிதழ்கள் அனைத்தும் விஜயவாடாவில் வெளியாகின. அங்கிருந்து வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. செய்தித்தாள்களை விஜயவாடாவிலிருந்து ரயிலில் விசாகப்பட்டினத்திற்கு அனுப்ப வேண்டியிருந்தது. நாளிதழ்கள் ரயிலில் வந்து வாசகர்களைச் சென்றடைவதற்குள் மதியம் ஆகிவிட்டது. வட ஆந்திராவின் பிற பகுதிகளை அவை வந்தடைய மாலை ஆகிவிடும்.. எனவே விஜயவாடாவில் பத்திரிகை ஆரம்பித்தால் மற்றவர்களில் ஒருவராகிவிடுவோம், மற்ற இதழ்களுக்குப் போட்டியாக வருவதை தவிர நமக்கு என்ன சிறப்பு? என்று தன்னைத்தானே ராமோஜி கேட்டு கொண்ட கேள்வியின் விளைவாக, அன்றைய தினம் மதியம் வரை மக்கள் வேறு எந்தப் பத்திரிகையின் முகத்தையும் பார்க்காத வட ஆந்திராவில் செய்திதாளை தொடங்க முடிவெடுத்தார் ராமோஜி. அப்போது செய்தித்தாள் அச்சிடப்படாத விசாகப்பட்டினத்தில் முதல் அடி எடுத்து வைக்க முடிவு செய்தார். சீனாவின் போர் வியூகமான "நோ மேன்ஸ் லேண்ட்" கோட்பாடும் இந்த முடிவுக்கு உத்வேகம் அளித்ததாக ராமோஜி ராவ் கூறி வந்தார்.
ஒரு தைரியமான தொடக்கம்
விசாகப்பட்டினத்தில் பத்திரிகை தொடங்குவது துணிச்சல் என்றால், அதற்குத் தேர்ந்தெடுத்த பெயர் பரபரப்பானது! அப்போது தெலுங்கு நாளிதழ்கள் அனைத்தின் பெயர்களிலும் ஆந்திரா என்ற வார்த்தை இருந்தது - ஆந்திரா பத்ரிகா, ஆந்திர பிரபா, ஆந்திர ஜனதா ஆந்திர ஜோதி, விசாலந்திரா என பலவற்றிலும் ஆந்திரா என்ற வார்த்தை ஒட்டிக்கொண்ட இருந்தது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆந்திர வார்த்தை இல்லாமல் பத்திரிகைக்கு பெயர் வைக்க விரும்பினால் ராமோஜி. ஏனெனில் யாரையும் இமிடேட் செய்து பழகியவர் அல்ல அவர். எதிலும் தனித்துவமாக திகழ்ந்த ராமோஜி ராவ், தமது பத்திரிகைக்கு புதுமையாக 'ஈநாடு' என்று பெயர் சூட்டியதிலும் அந்த தனித்துவத்தை காட்டினார். 'நாடு' என்பதற்கு இரண்டு பொருள்கள் உண்டு - 'இடம் மற்றும் நாள்'. ஈநாடு என்றால் இந்த இடம் அல்லது இந்த நாள். இந்த பெயருடன், ஓர் ஜெனரஞ்சகமான ஓர் பிராந்திய காலை நாளிதழ் வெளிவர தொடங்கியது.
விசாகப்பட்டினம் சீதம்மாதாரா பகுதியில் உள்ள நக்கவாணிபாலத்தில், அப்போது மூடப்பட்டிருந்த ஸ்டுடியோ ஒன்று குத்தகைக்கு எடுக்கப்பட்டு சரி செய்யப்பட்டது. செய்தித்தாளை அச்சிட, மும்பையில் உள்ள தி நவ்ஹிந்த் டைம்ஸ் நிறுவனத்திடமிருந்து பயன்படுத்தப்பட்ட (செகண்ட் ஹேண்ட்) டூப்ளக்ஸ் பிளாட்பெட் ரோட்டரி பிரிண்டிங் பிரஸ் வாங்கப்பட்டது. அப்போதே அதற்கு ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய் செலவானது. ஐந்து அல்லது ஆறு நாட்களுக்கு முன்பே சோதனை ஓட்டம் செய்யப்பட்டது. திட்டமிட்டபடி எல்லாம் தயார் செய்யப்பட்டது. நல்ல நேரமும் வந்தது. ஆகஸ்ட் 9, 1974 அன்று மாலை, ராமோஜி ராவ், 'ஈநாடு' முதல் பதிப்பை அச்சிட ஒரு தொழிலாளியின் கையால் பிரிண்டிங் பிரசின் சுவிட்சை போட செய்தார். மறுநாள், 1974 ஆகஸ்ட் 10 ஆம் தேதி விடியற்காலையிலேயே விசாகப்பட்டினத்தில் மக்களின் வீட்டு வாசலை அடைந்தது ஈநாடு பத்திரிகை.
"ஈநாடு உங்கள் இதழ்" என்பார் தலைவர் ராமோஜி ராவ் . இது எங்கள் இதழ் என்று வாசகர்கள் நெஞ்சில் பதித்துள்ளனர். அதுதான் ஈநாடின் புகழ், முன்னேற்றம், எல்லாம். அதனால் தெலுங்கு குடும்பங்களில் ஈநாடு இன்றும் முக்கிய அங்கமாக மாறியுள்ளது. ஈநாடு பத்திரிகைக்கு கோடிக்கணக்கான வாசகர்கள் உள்ளனர். ஈநாடு செய்திகளை நம்புபவர்கள்,ஒரு செய்தி உண்மையா, இல்லையா என்பதை அறிய மக்கள் ஈநாடு, ஈடிவியை தான் இன்றும் தேடுகிறார்கள்" என்று பெருமிதத்துடன் கூறுகிறார் ஈநாடு ஆசிரியர் (ஆந்திரா) எம்.நாகேஸ்வரராவ்.
எளிதான வார்த்தைகள்
ஈநாடு வருவதற்கு முன், பத்திரிகைகள், தினசரிகளில் நிறைய சமஸ்கிருத வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டன. மக்களுக்கு அந்த மொழி புரியவில்லை, வாசகர்கள் செய்தித்தாள்களை விட்டு ஒதுங்கினர். எளிதில் புரியும் பொதுவான சொற்களைப் பயன்படுத்துவதன் மூலம் மாற்றத்தை ஏற்படுத்தியவர் ராமோஜி ராவ். செய்தி, தகவல் திறம்பட மக்களுக்குச் செல்லும் வகையில் பத்திரிக்கை மொழியை எளிமையாக்கியவர் அவர் என்று புகழாரம் சூட்டுகிறார் ஈநாடு ஆசிரியர் (தெலங்கானா) டி.என்.பிரசாத்.
1974 இல் ஆந்திராவின் மொத்த மக்கள் தொகை ஒரு கோடியாக இருந்தது. தெலுங்கு நாளிதழ்களின் புழக்கம் (Circulation) இரண்டு லட்சமாகத்தான் இருந்தது. மீதமுள்ள 90 லட்சம் மக்களைச் சென்றடைவதே தங்கள் நோக்கமாக இருக்க வேண்டும் என்று ஊழியர்களிடம் ராமோஜி ராவ் கூறினார். 1975 ஆம் ஆண்டு டிசம்பர் 17 ஆம் தேதி ஹைதராபாத்தில் ஈநாடு உதயமானது. அப்போதைய முதல்வர் ஜலகம் வெங்கலராவ், அப்போதைய உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அவுலா சாம்பசிவராவ் மற்றும் தெலுங்கு நடிகர்கள் என்டிஆர் மற்றும் ஏஎன்ஆர் ஆகியோர் முன்னிலையில் ஹைதராபாத் பதிப்பு தொடங்கப்பட்டது.
1978 ஆம் ஆண்டு மே தினத்தன்று, அப்போதைய ஆளுநர் சாரதா முகர்ஜியின் கைகளால் ஈநாடு விஜயவாடா பதிப்பு பெரும் ஆரவாரத்துடன் தொடங்கப்பட்டது. விஜயவாடா பதிப்பு அதன் தொடக்கத்திலிருந்தே புழக்கத்தில் ஒரு லட்சம் மைல்கல்லை கடந்தது. ஆந்திர பிரபாவை பின்னுக்கு தள்ளி முன்னணி தெலுங்கு நாளிதழின் இடத்தை பிடித்துள்ளது. 46 ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளது ஈநாடு! ஜூன் 30, 2002 அன்று, ஈநாடின் நான்காவது பதிப்பு திருப்பதியில் தொடங்கப்பட்டது, ஒரே நாளில் ஏழு யூனிட்கள் தொடங்கப்பட்டு, ஒரு புதிய போக்கை உருவாக்கியது. கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிராவின் தலைநகரங்களிலும் புதிய பதிப்புகள் வெளிவந்துள்ளன. செப்டம்பர் 11, 2002 அன்று, ராமோஜி ராவ் டெல்லி பதிப்பைத் தொடங்கினார். மொத்தம் 23 பதிப்புகளுடன், ஈநாடு படிப்படியாக விரிவடைந்தது மட்டுமல்லாமல் தெலுங்கு மக்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் வேரூன்றியுள்ளது
1974 இல், 32 ஏஜென்சிகளுடன் ஈநாட்டின் ஆரம்ப புழக்கம் (Circulation) 4,500 ஆக இருந்தது. 50 வருடங்களில், 11,000 ஏஜென்சிகளுடன் 13 லட்சத்திற்கும் அதிகமான பிரதிகளுடன் ஈநாடு இன்று மிகப்பெரிய தெலுங்கு நாளிதழாக வெளிவந்து கொண்டிருக்கிறது. எவராலும் எட்டப்படாத புழக்கத்தின் உச்சத்தில் அது நிலைபெற்றுள்ளது.