இந்து மத சாஸ்திரப்படி துளசி செடிக்கு அதிக முக்கியத்துவம் எப்போதும் உண்டு. அதுமட்டுமல்லாமல், ஆயுர்வேதத்திலும் துளசி ஒரு சிறந்த மருத்துவ மூலிகையாகவும் கருந்தப்படுகிறது. பலரும், துளசி செடியை கவனமாக வீட்டில் வளர்த்து வந்தாலும் கால நிலை மாற்றத்தின் காரணமாக வாடி அழுக ஆரம்பித்துவிடும். குறிப்பாக, கோடை மற்றும் குளிர்காலங்களில் செடி வறண்டு போகக்கூடும். அந்த வகையில், குளிர்காலத்தில் துளசி செடியை எப்படி பராமரிப்பது என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.
- சூரிய ஒளி: குளிர்காலத்தில் துளசி செடிக்கு சூரிய ஒளி மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. சூரிய ஒளி அதிக நேரம் படாமல் இருக்கும் இடத்தில் நீங்கள் துளசி செடியை வைத்திருந்தால், உடனடியாக சூரிய ஒளி படும் இடத்தில் மாற்றி வைக்கவும். ஒரு நாளைக்கு குறைந்தது 3 மணி நேரமாவது செடியை சூரிய ஒளியில் வைத்திருக்க பரிந்துரைக்கப்படுகிறது.
- இரவில் வீட்டிற்குள் வைக்கவும்: குளிர்காலத்தில் காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும், குறிப்பாக பனி அதிகமாக இருக்கும். இது, இலைகளை வாடச்செய்து செடியை வளர விடாது. எனவே, இரவு நேரத்தில் துளசி செடியை வீட்டிற்குள் வைத்து காலையில் வெளியே வைத்து விடுங்கள்.
- தண்ணீர் ஊற்றுவதில் கவனம்: குளிர்காலத்தில் துளசி செடிக்கு தினசரி தண்ணீர் விடுவதால், பானையில் தண்ணீர் தேங்க நேரிடும். இதனால், செடியின் வேர்கள் அழுகும் அபாயம் உள்ளது. குளிர்காலத்தில் ஈரப்பதம் எப்போதும் இருப்பதால், மண் அவ்வளவு சீக்கிரம் காய்ந்து போகாது. இரண்டு நாட்களுக்கு ஒரு முறை அல்லது மண் வறண்டு போயிருக்கிறதா என்பதை பார்த்து தண்ணீர் ஊற்றுங்கள்.
- புதிய மண்: குளிர்காலம் தொடங்கிவிட்டால், துளசி செடியில் உள்ள மண்ணை மாற்ற பரிந்துரைக்கப்படுகிறது. இல்லையென்றால், அவ்வப்போது புதிய மண்ணை கலந்து விடலாம். பழைய மண்ணால், செடிக்கு சரியான அளவு ஆக்ஸிஜன் தர இயலாது. இதனால், செடி காய்ந்து போக தொடங்கும்.
- களைகளை நீக்குங்கள்: துளசி செடியை சுற்றி வளர்ந்துள்ள களைகளை நீக்குவது முக்கிய பங்கு வகிக்கிறது. மஞ்சள் நிற இலைகள், பூக்கள்,புற்கள் போன்ற களைகளை நீக்குவதால் செடிக்கு கிடைக்க வேண்டிய சத்துக்கள் கிடைத்து செழிப்பாக வளரும்.
இலைகளை அதிகமாக பறிக்க வேண்டாம்:
- சிலர் மத காரணங்களுக்காக, சிலர் மருந்திற்காக துளசி இலைகள் தினசரி பறிப்பதுண்டு. ஆனால், குளிர்காலத்தில் அதிக இலைகளை பறிப்பதால் துளசி செடி காய்ந்து கருகத் தொடங்க வாய்ப்புகள் உள்ளது. எனவே, குளிர்காலத்தில் கம்மியான அளவு மட்டும் இலைகளை பறிக்கவும்.
- இது தவிர, துளசி நட்டு வைத்துள்ள மண்ணில் காய்ந்த இலைகள், பூக்களை சேர்ப்பதால் மண் வெப்பமாக இருக்கும். இதனால், குளிர்காலத்தில் வீசும் குளிர்ந்த காற்றில் இருந்து செடியை பாதுகாப்பாக வைக்கலாம்.
- இரவு நேரங்களில், துளசி செடியின் இலைகள் மற்றும் தண்டுகளை துணியால் மூடுவதால் பனியினால் ஏற்படும் தாக்கத்திலுருந்து செடியை பாதுகாக்கலாம்.
- 15 நாட்களுக்கு ஒரு முறை மண்ணில் வேப்பம் பொடியை கலந்து விடுவது, செடியை அடர்த்தியாகவும், ஆரோக்கியமாகவும் வளர உதவியாக இருக்கும்.
இதையும் படிங்க:
வீட்டில் புதினா செடி வளர்ப்பது எப்படி? குரோ பேக், பூந்தொட்டி இந்த அளவில் இருக்கணும்!
மல்லிகை செடியில் கொத்து கொத்தா பூ பூக்கணுமா? வாரத்திற்கு ஒருமுறை 'இதை' ஸ்ப்ரே பண்ணுங்க!
வெற்றிலை கொடி செழிப்பாக வளர 'இந்த' மண்ணில் நட்டு வையுங்கள்..பெரிய இலைகள் நிச்சயம்!