இலங்கை: யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், இலங்கை மீன்வளத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மற்றும் இணைத் தலைவர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ஆகியோர் தலைமையில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத செயல்பாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இதில், கடல் தொழிலாளர் பிரதிநிதிகள், இந்தியக் கடல்தொழிலாளர்களின் சட்டவிரோத செயல்பாடு காரணமாக பாதிக்கப்படும் தங்களுடைய வாழ்வாதாரம் தொடர்பாக போதிய கரிசனை வெளிப்படுத்தப்படுவதில்லை. மேலும், அண்மையில் இலங்கைக்கு வந்த இந்திய வெளியுறவு அமைச்சரைச் சந்தித்த போது, தமிழ் மக்களின் பிரதிநிதிகளினால் கடல்தொழிலாளர் விவகாரம் பேசப்படவில்லை என்று குற்றம் சாட்டினர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியதாவது, “இந்திய மீனவர் பிரச்சினை குறித்து கலந்துரையாட டெல்லிக்கு வருமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தனக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதன் மூலம் தடைபட்டிருக்கும் இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுக்களை மீண்டும் முன்னெடுத்து, இந்தியக் கடல் தொழிலாளர்கள் விவகாரத்தை தீர்ப்பதற்கு அமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளார்” இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், மாவட்டத்தில் காணப்படும் போதைப்பொருள் பரவல் மற்றும் சமூக விரோத செயல்களை கட்டுப்படுத்தல், வீதி விபத்துக்களை குறைப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெடுப்புக்கள் போன்ற விஷயங்கள் விரிவாக ஆராயப்பட்டது.
இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு மாயாவதி மலர்வளையம் வைத்து நேரில் அஞ்சலி