இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. தொடர்ந்து மறுநாளே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. தேர்தலுக்கு முன்னதாகவும் வாக்குப்பதிவின் போது நாடு முழுவதும் நிகழ்ந்த வன்முறை சம்பவங்களை தொடர்ந்து பாகிஸ்தானில் மொபைல் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டன.
மேலும், வாக்கு எண்ணிக்கையில் தொடக்கத்தில் இருந்தே சிறையில் இருக்கும் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆதரவு சுயேட்சை எம்.பிக்கள் பல்வேறு இடங்களில் வெற்றியும், முன்னிலையும் வகித்து வருவதாக செய்திகள் வெளியாகின. இதைத் தொடர்ந்து நடந்த கலவரத்தில் பல்வேறு பகுதிகளில் வாக்கு எண்ணும் பணியில் தொய்வு ஏற்பட்டது.
இந்நிலையில், திங்கட்கிழமை (பிப். 12) பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்த முழு தகவல்களையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது. அதன்படி முன்னாள் பிரதமர்கள் இம்ரான் கான் மற்றும் நவாஷ் ஷெரிப் பல்வேறு இடங்களில் வெற்றி பெற்று உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இருப்பினும், எந்த கட்சிக்கும் நாட்டை ஆளும் அளவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 854 தேசிய மற்றும் மாகாண சட்டப் பேரவை தொகுதிகளில் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில், 348 சுயேட்சைகள் வெற்றி பெற்றதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இம்ரான் கான் கட்சி மற்றும் பேட் சின்னம் முடக்கப்பட்ட நிலையில் சுயேட்சைகளாக போட்டியிட்ட ஆதரவு வேட்பாளர்கள் பல்வேறு இடங்களில் வெற்று பெற்று உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. தேசிய சட்டப்பேரவையில் சுயேட்சைகள் 101 இடங்களை கைப்பற்றி உள்ள நிலையில், முனனாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் கட்சி 75 இடங்களையும், முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டாவின் கட்சி 54 இடங்களயும் மற்ற கட்சிகள் ஒரு சில இடங்களையும் கைப்பற்றி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஒட்டுமொத்தமாக 265 இடங்களில் தேர்தல் நடைபெற்ற நிலையில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 133 பெரும்பான்மை இடங்கள் தேவைப்படும் நிலையில், கூட்டணி கட்சிகளை தங்கள் வசம் இழுக்க நவாஸ் ஷெரிப், ஷபாஸ் ஷெரிப் தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க : நம்பிக்கையில்லா தீர்மானத்தில் நிதிஷ் குமார் வெற்றி! ஆட்சியை தக்கவைத்தார்!