வியன்னா (ஆஸ்திரியா): இரண்டு நாட்கள் அரசு முறைப்பயணமாக ரஷ்யா சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, அங்கு தமது பயணத்தை முடித்து கொண்டு, இன்று ஆஸ்திரியா (ஜுலை 10) சென்றடைந்தார். அங்கு அவருக்கு அதிபர் மாளிகையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து, தமது இந்தப் பயணத்தின் முக்கிய நிகழ்வாக, பிரதமர் மோடியும், ஆஸ்திரியா பிரதமர் கார்ஸ் நெஹாம்மரும் இந்தியா மற்றும் ஆஸ்திரியா நாடுகளைச் சேர்ந்த பெருநிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை (CEO) சந்தித்துப் பேசினர். இந்த உயர்நிலைக் கூட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட ஆஸ்திரிய நிறுவனங்களின் சி.இ.ஓ,க்கள் பங்கேற்றனர்.
அப்போது, " இந்தியா - ஆஸ்திரியா இடையேயான பொருளாதார உறவை வலுப்படுத்தும் வகையில், இந்தியாவில் தொழில் முதலீடுகளை செய்ய வாருங்கள்" என்று ஆ.ஸ்திரிய நாட்டின் தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்" என்று வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் தமது எக்ஸ் வலைதள பதிவில் தெரிவித்துள்ளார்.
மேலும், " உள்கட்டமைப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை, தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் முதலீட்டுக்கான வாய்ப்புகள் உள்ளன என்றும், இத்துறைகளில் இந்திய - ஆஸ்திரிய நிறுவனங்கள் இணைந்து செயல்பட வேண்டும்" என்றும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்ததாகவும் ரன்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
Strengthening 🇮🇳-🇦🇹 economic ties!
— Randhir Jaiswal (@MEAIndia) July 10, 2024
PM @narendramodi and Austrian Chancellor @karlnehammer jointly addressed renowned Austrian and Indian CEOs at a round table business meeting in Hofburg Palace, Vienna today.
PM highlighted significant potential for collaboration between… pic.twitter.com/jf9LzdN1uu
இதைத்தொடர்ந்து வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், " இந்தியா- ஆஸ்திரியா இடையேயான புதிய பொருளாதார வாய்ப்புகள் குறித்தும், இருதரப்பு வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது பற்றியும் இன்றைய உயர்நிலை கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டது. உள்கட்டமைப்பு மற்றும் மின்னணு துறைகளில் இந்தியாவின் வளர்ச்சி அளப்பறியது" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
வந்தே மாதரம் இசைத்த இசைக் குழுவினர்: ஆஸ்திரியா நாட்டு பயணத்தின் ஒரு பகுதியாக, தலைநகர் வியன்னாவில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, 50 பேரை கொண்ட அந்நாட்டின் பிரபல இசைக் குழுவினர், பிரதமர் மோடியின் முன்னிலையில், இந்தியாவின் தேசிய பாடலான 'வந்தே மாதரம்' பாடலை இசைத்தனர்.
இந்திய பிரதமர் முன்பே, அவரது நாட்டின் தேசிய பாடலை இசைத்தது மிகவும் அற்புதமான அனுபவம் என்று இசைக் குழுவினர் பூரிப்புடன் தெரிவித்தனர். இந்த இசைக் குழுவின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் விஜய் உபத்யாயா, உத்தரப் பிரதேச மாநிலம் லக்னௌவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.