அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள பிரதமர் மோடி, அபுதாபியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள முதல் இந்துக் கோயிலை திறந்து வைத்தார். இந்த கோயிலின் பெயர் சுமாமி நாராயண் திருக்கோயில் ஆகும்.
பின்னர், நிகழ்ச்சியில் நரேந்திர மோடி கூறியதாவது, "அபுதாபியில் இந்த கோயில் திறந்ததற்கு மகிழ்ச்சியடைகிறேன். அயோத்தியின் மகிழ்ச்சி இங்கு காணப்படுகிறது. அயோத்தி ராமர் கோயிலுக்கும், அபுதாபியின் இந்த கோயிலுக்கும் நான் சாட்சியாக இருப்பது என்னுடைய அதிர்ஷ்டம்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பது பல கால கனவு. அந்த கனவு கடந்த மாதம்தான் நிறைவேறியது. அதன் மூலம், ஒட்டுமொத்த இந்தியாவும் மகிழ்ச்சியில் உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தால் தானமாக வழங்கப்பட்ட 27 ஏக்கர் நிலத்தில் ரூ.700 கோடி மதிப்பீட்டில் இக்கோயில் அமைந்துள்ளது.
108 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த கோயில் ஆன்மீகச் சின்னம் அல்ல. இதில் கலைஞர்களின் கைவண்ணம் உள்ளது. இந்தக் கோயிலுக்கு கடந்த 2017ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்தக் கோயிலை நிறுவியதன் மூலம், அபுதாபியில் வாழும் இந்தியர்கள் மட்டுமல்லாது, 140 கோடி இந்தியர்களின் இதயங்களை ஐக்கிய அமீரக அரசு வென்றுள்ளது.
இனி வரும் காலங்களில், ஏராளமான பக்தர்கள் இந்தக் கோயிலுக்கு வருகை புரிவர். இந்தக் கோயிலை நிறுவியதற்கு மனமார்ந்த நன்றி. இதுவரை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஃபுஜ் கலிபா அடையாளமாகத் திகழ்ந்தது. தற்போது, இந்தக் கோயிலை நிறுவியதன் மூலம் இங்கு மக்களின் வருகை அதிகரிக்கும் என நான் நம்புகிறேன்.
ஒட்டுமொத்த இந்தியா மற்றும் உலகெங்கிலும் வாழும் இந்தியர்கள் சார்பாக, ஐக்கிய அரபு அமீரக அரசுக்கும், குடியரசுத் தலைவர் பின் சயீத் அல் நஹ்யானுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கோள்கிறேன். இந்தக் கோயிலை நிறுவுவதில் அரசு மேற்கொண்ட பங்களிப்பை பாராட்டாமல் இருக்க முடியாது” என்று கூறினார்.
முன்னதாக, கோயிலுக்கு வருகை தந்த பிரதமர் மோடியை ஈஸ்வர்சரந்தாஸ் சுவாமி வரவேற்றார். பின் கோயிலில் பிரார்த்தனை செய்து ஆரத்தி எடுத்தார். 'வசுதைவ குடும்பம்' என்ற செய்தியை கோயில் வளாகத்தில் உள்ள கல்லில் பிரதமர் மோடி பொறித்தார்.
இதையும் படிங்க: பொன்னியின் செல்வன் படத்தில் பணியாற்றியதால்தான்.. போர் பட இயக்குநர் பிஜோய் நம்பியார் கூறியது என்ன?