கசான் (ரஷ்யா): பிரிக்ஸ் கூட்டமைப்பில் நாடுகளின் 16வது உச்சி மாநாடு ரஷ்யாவின் கசான் நகரில் நடைபெற்று வருகிறது. நாளை வரை (அக்.24) நடைபெறும் இம்மாநாட்டில், இன்றைய நிகழ்வில் பங்கேற்று பிரதமர் மோடி பேசினார்.
அப்போது அவர், " போர், மோதல்கள், பொருளாதார நிலையற்றத்தன்மை, காலநிலை மாற்றம், பயங்கரவாதம் என்று உலகம் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ள சூழலில், நாம் இந்த மாநாட்டை நடத்துகிறோம். மேலும் இன்றயை தொழில்நுட்ப உலகில் சைபர் பாதுகாப்பு, தவறான மற்றும் போலியான தகவல்களை பரப்புவது பெருகி வருகிறது. உலகை வடக்கு -தெற்கு, கிழக்கு - மேற்கு என பிரித்து பேசுவது பிரிவினையை ஏற்படுத்துகிறது.
இப்படி உலக அளவில் நிலவும் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது என்று நம்புகிறேன். நமது அணுகுமுறை மக்களை மையமாகக் கொண்டதாக இருக்க வேண்டும். பிரிக்ஸ் என்பது பிளவுப்படுத்தும் அமைப்பல்ல; மக்களின் நலனுக்கான அமைப்பு என்ற செய்தியை உலகிற்கு நாம் உரக்க சொல்ல வேண்டும்" என்று மோடி வலியுறுத்தினார்.
மேலும் அவர், "சமாதான பேச்சுவார்த்தை மற்றும் ராஜாங்கரீதியான நடவடிக்கைகளுக்கு தான் நாம் ஆதரவளிக்க வேண்டுமே தவிர, போருக்கு அல்ல. கோவிட் காலத்தில் உலகம் சந்தித்த சவால்களை நாம் ஒன்றிணைந்து வீழ்த்தியதைப் போல, வருங்கால தலைமுறையினரின் பாதுகாப்பு மற்றும் வளமையான எதிர்காலத்துக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும் திறன் நமக்கு (பிரிக்ஸ் நாடுகளுக்கு) உள்ளது. இதுபோன்று சைபர் பாதுகாப்பு, பாதுகாப்பான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பயன்பாடு ஆகியவை தொடர்பாக உலகளாவிய நெறிமுறைகளை வகுப்பதற்கான முயற்சிகளை நாம் முன்னெடுக்க வேண்டியது அவசியம்" என்றும் மோடி பேசினார்.
பயங்கரவாதத்தை வேரறுப்பதில் பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் மோடி வலியுறுத்தினார். இதுகுறித்து மாநாட்டில் பேசிய அவர், "பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதி அளிப்பதற்கு எதிராக நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். பயங்கரவாதத்தை வேரறுப்பதில் இரட்டை நிலைப்பாட்டுக்கு இடமில்லை. தீவிரவாதத்துக்கு இளைஞர்கள் மத்தியில் உள்ள ஆதரவு மனநிலையை தடுக்கும் நடவடிக்கைகளை நாம் முனைப்புடன் முன்னெடுக்க வேண்டும்.
பிரிக்ஸ் கூட்டமைப்பில் புதிய நாடுகள் இணைய விருப்பம் தெரிவித்தால் அதை வரவேற்க இந்தியா தயாராக உள்ளது.அதேசமயம் இந்த கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு நாட்டின் தனிப்பட்ட கருத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி பேசினார்.