வாஷிங்டன்: உலகமே உற்றுநோக்கும் அமெரிக்காவின் அதிபர் தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடக்க இருக்கிறது. அதிபர் தேர்தலில், குடியரசுக் கட்சி வேட்பாளரான முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பை எதிர்த்து, ஆளும் ஜனநாயக கட்சியின் வேட்பாளரும், துணை அதிபருமான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.
இருவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், கருத்து கணிப்புகளில் கமலா ஹாரிஸ் கையே ஓங்கியுள்ளது. இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் வந்த தேர்தல் நன்கொடையில் டொனால்ட் ட்ரம்பை விட மூன்று மடங்கு நிதி கமலா ஹாரிஸுக்கு கிடைத்துள்ளது.
குடியரசுக் கட்சிக்கு 130 மில்லியன் டாலர்கள் தேர்தல் நிதியாக குவிந்துள்ள நிலையில், அதைவிட மூன்று மடங்காக கமலா ஹாரிஸுக்கு 361 மில்லியன் டாலர்கள் குவிந்துள்ளன. இதுவே ஒரு மாதத்தில் கட்சிக்கு கிடைத்த அதிகபட்ச தொகையாகும்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்க இன்னும் இரண்டு மாதங்களே உள்ளன. தற்போது வரை அங்கு கமலா ஹாரிஸ் பக்கமே வெற்றி வாய்ப்பு நிலவுவதாக தெரிகிறது.
இதுகுறித்து கமலா ஹாரிஸின் பிரச்சார அலுவலர்கள் கூறுகையில், இந்த நிதியை மேற்கொண்டு வாக்காளர்களை சென்றடைய பயன்படுத்துவோம் என்றும் வரும் இரண்டு மாதங்களில் பிரச்சாரம் தொடர்பாக 2,000 நிகழ்ச்சிகள் திட்டமிட்டுள்ளோம், தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் விளம்பரத்துக்காக 370 டாலர்கள் செலவழிக்கப்படும் என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க: சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம்! பிரதமர் மோடி உறுதி!