காசா: மருத்துவர், செவிலியர் போல வேடமணிந்து காயமடைந்தவர்கள், மற்றும் இடம்பெயர்ந்தவர்களுக்கு தங்கும் இடமாக விளங்கிய கான் யூனிஸில் உள்ள அல்-அமல் மருத்துவமனையில் இஸ்ரேல் படையினர் நேற்று (ஜன.30) தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இஸ்ரேல் ராணுவம் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.
ஹமாஸ் தலைமையிலான போராளிகள் கடந்த அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேலைத் தாக்கியதில் 1,200 க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். இதை தொடர்ந்து காஸாவிற்கு எதிராக இஸ்ரேல் போரை தொடங்கியது. இந்த மோதலில் பாலஸ்தினிய மக்கள் தொகையில் பெரும் பகுதியினர் இடம்பெயர்ந்துள்ளனர்.
மேலும் இந்த போரில் இஸ்ரேலியப் படைகள் சந்தேகத்திற்குரிய போராளிகளை ஒடுக்கியது. இந்த போரில் ஏராளமான ராணுவ வீரர்கள், பொதுமக்கள், குழந்தைகள் உயிரிழந்தனர். இதனிடையே கடந்த மாத இறுதியில் காசாவில் தற்காலிக போர் நிறுத்தம் கொண்டு வர்ப்பட்டது. இந்த போர் நிறுத்தம் டிசம்பர் 1ம் தேதியுடன் முடிவுக்கு வந்த நிலையில் மீண்டும் காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் துவங்கியது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்தனர்.
இந்நிலையில் 7,000 இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சமடைந்துள்ள தெற்கு காஸா நகரமான கான் யூனிஸில் உள்ள அல்-அமல் மருத்துவமனையில் இஸ்ரேல் படையினர் மருத்துவர், செவிலியர் போல வேடமணிந்து சென்று நேற்று சோதனை நடத்தி தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்பட்டுள்ளது.
இஸ்ரேலியப் படைகள் தெற்கு காசா பகுதியில் உள்ள அல்-அமல் மருத்துவமனையை ஆக்கிரமித்து, இடம்பெயர்ந்த மக்களையும் மருத்துவ ஊழியர்களையும் அந்தப் பகுதியை காலி செய்யுமாறு அறிவுறுத்தியது, என போரினால் பாதிக்கப்பட்ட இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்களுக்கு உதவி செய்து வரும் பாலஸ்தீன செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், காசா பகுதியில் நடக்கும் சண்டைகளுக்கு மத்தியில் பொதுமக்களின் பாதுகாப்புக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் நேற்று அழைப்பு விடுத்துள்ளது.
"மக்கள்தொகை அதிகமுள்ள நகர்ப்புறங்களில் நடந்துவரும் தாக்குதல்கள், மருத்துவமனைகளைச் சுற்றியுள்ள பகுதிகள் உட்பட, மருத்துவ குழுக்கள், நோயாளிகள், காயமடைந்தவர்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் போன்ற மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கிறது" என்றும் அக்குழு தெரிவித்துள்ளது. மேலும் மருத்துவமனைக்கு வெளியே வரிசையாக நிற்கும் இஸ்ரேலிய டாங்கிகள் உயிருள்ள வெடிமருந்துகள் மற்றும் புகை குண்டுகளை உள்ளே இருந்தவர்களை நோக்கி சுட்டதாக மீட்பு சேவை கூறியது.
இந்நிலையில் "அல்-அமல் மருத்துவமனையை தாக்கவோ, அதற்குள் நுழையவோ அல்லது துப்பாக்கி முனையில் மக்களை வெளியேறும்படி கட்டளையிடவோ இல்லை" என்று IDF செய்தித் தொடர்பாளர் அறிக்கை மூலம் தெரிவித்தார். இந்நிலையில் தீவிரவாதிகள் மருத்துவமனைகளை மறைப்பாக பயன்படுத்துவதாக இஸ்ரேல் கூறுகிறது.
மருத்துவமனைகளுக்கு அருகாமையில் நிலத்தடி சுரங்கப்பாதைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவமனை வளாகத்தில் அக்டோபர் 7 தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வாகனங்கள் இருப்பதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இஸ்ரேலிய இராணுவம் தனது படைகள் மருத்துவமனையின் பகுதியில் செயல்படுகின்றன, ஆனால் மருத்துவமனைக்குள் இல்லை என்று மற்ற எந்த விவரங்களில் அளிக்காமல் பொதுவாக கூறியது.
காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 26,700க்கும் அதிகமான பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கையில் போராளிகள் மற்றும் குடிமக்களுக்கு இடையில் எந்த வேறுபாடுகளும் கூறப்படவில்லை. ஆனால் இறந்தவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள் மற்றும் சிறார்களே என்று கூறுகிறது.
இந்நிலையில் போரில் காயமடைந்த பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்களுக்கு சிகிச்சை அளித்து, இடம்பெயர்ந்த மக்களுக்கு முக்கியமான தங்குமிடங்களை வழங்கிய காசாவில் உள்ள மருத்துவமனைகள் மீதான சோதனைகளுக்காக இஸ்ரேல் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.