வாஷிங்டண்: அமெரிக்காவின் இந்தியான மாகாணத்தில், இந்திய வம்சாவளியைக் கொண்ட கவின் தசவுர் (29) வசித்து வந்தார். புதிதாக திருமணமான இவர், அவரது மனைவியின் கண் முன்பே சுட்டுக் கொல்லப்பட்டார். இது குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சாலையில் ஏற்பட்ட தகராறில் இச்சம்பவம் நடந்தது தெரியவந்துள்ளது.
மேலும், கொல்லப்பட்ட கவின் தசவுர் இந்தியாவின் ஆக்ராவைச் சார்ந்தவர் என்றும், அவரது மனைவி விவியானா ஜமோரா மெக்சிகோ நாட்டைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. குறிப்பாக, இருவருக்கும் கடந்த ஜூன் 29ஆம் தேதி திருமணமான நிலையில், கணவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இதனிடையே, இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் சாலையில் முன்பாக இருந்த கார் ஓட்டுநர் மற்றும் பின்னால் மற்றொரு காரில் இருந்த கவின் தசவுர் ஆகியோருக்கு மத்தியில் ஏற்பட்ட தகராறில் ஏற்பட்டதாக, சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இருவரிடமும் துப்பாக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், இச்சம்பவம் குறித்து மரியன் கவுண்டி பகுதியில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பின்னர், துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் விடுவிக்கப்பட்டதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளர். மேலும், அவர் தன்னை தற்காத்துக் கொள்ள துப்பாக்கிச் சூடு நடத்தி இருக்கலாம் என்றும் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே, கணவரின் மரணத்தால் துக்கமடைந்த மனைவி இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், சாலைத் தகராறில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த வீடியோவை பின்னால் இருந்த மற்றொரு காரில் இருந்த நபர் பதிவு செய்துள்ளார். தற்போது, இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், கொல்லப்பட்ட தசவுரின் கையில் துப்பாக்கி இருந்ததும், அதனுடன் அவர் காரை குத்தி தகராறில் ஈடுபட்டதும், பின்னர் துப்பாக்கியை அந்த காரில் இருந்த நபரை நோக்கி நீட்ட முயன்ற போது, அந்த காரில் இருந்த நபர் தசவுரை மூன்று முறை சுடுவதும் தெளிவாக பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க: ஓமன் மசூதியில் துப்பாக்கிச் சூடு- 4 பேர் பலி! பின்னணியில் யார்?