வாஷிங்டன் டிசி (அமெரிக்கா): அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் டிசி அலுவலகத்தில் கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி இந்திய தூதரக அதிகாரி ஒருவரின் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
இவரது இறப்பு குறித்து அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய தூதரகத்தின் உறுப்பினர் ஒருவர் செப்டம்பர் 18ஆம் தேதி அன்று மாலையில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவரது குடும்ப உறுப்பினர்களோடு தொடர்புகொண்டு, அவரது உடல் இந்தியா வந்தடைவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். மேலும், குடும்பத்தினரின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மர்மமான முறையில் உயிரிழந்த அதிகாரி குறித்த எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
இதையும் படிங்க: இலங்கை அதிபர் தேர்தல் தொடங்கியது.. எப்போது வாக்கு எண்ணிக்கை?
இந்த துயரமான நேரத்தில் எங்களது ஆழ்ந்த அனுதாபங்களையும், பிரார்த்தனைகளையும் உயிரிழந்த அதிகாரியின் குடும்பத்தினருக்கு தெரிவித்துக் கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாது, இரண்டு நாட்களுக்கு முன்பாக (செப்.18) நடந்த இந்த மர்ம மரணம் குறித்து உள்ளூர் காவல்துறை மற்றும் ரகசிய சேவை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.