இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தோஷாகானா வழக்கில் இருவருக்கும் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அரசு கஜனாவில் இருந்த பொருட்கள், உள் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது வழங்கப்பட்ட விலைமதிப்பற்ற பரிசுப் பொருட்களை தனது சுயலாபத்திற்காக விற்றதாக எழுந்த புகாரில் இம்ரான் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், அந்த வழக்கில் அவர் மற்றும் அவரது மனைவிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
மேலும் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி 10 ஆண்டுகளுக்கு பொது பதவிகள் ஏதும் வகிக்கவும் நீதிமன்றம் தடை விதித்து உள்ளது. அத்துடன் இருவருக்கும் 787 மில்லியன் பாகிஸ்தான் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அரசின் ரகசிய ஆவணங்களை கசியவிட்ட குற்றச்சாட்டில் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருந்த நிலையில், அந்த தீர்ப்பு வெளியான மறுநாளே தோஷக்கண்ணா வழக்கில் தீர்ப்பும் வழங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானில் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை பிரதமராக இருந்த இம்ரான் கான், ராணுவ ஆதரவை இழந்தபின் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு ஆட்சியில் இருந்து நீக்கப்பட்டார். தொடர்ந்து, அவர் மீது பல்வேறு வழக்குகளில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
இம்ரான் கான் சிறைக்கு சென்றதை அடுத்து ஆட்சி பொறுப்பேற்ற ஷபாஸ் ஷெரிப்பால் கட்டுகோப்புடன் ஆட்சியை கொண்டு செல்ல முடியவில்லை. கடும் பொருளாதார நெருக்கடியால் தவித்த பாகிஸ்தான் நாடாளுமன்றம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கலைக்கப்பட்டது. இந்நிலையில், வரும் பிப்ரவரி 8ஆம் தேதி பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
இரண்டு வழக்குகளில் இம்ரான் கானுக்கு ஏறத்தாழ 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்ட நிலையில், சிறைத் தண்டனைக்கு அடுத்த 10 ஆண்டுகள் அவர் தேர்தலில் போட்டியிட முடியாது எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அவரது அரசியல் வாழ்க்கை அஸ்தமனமானதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை!