டெல் அவிவ்: இஸ்ரேல் - காஸா இடையிலான போர் தீவிரமடைந்து காணப்படுகிறது. இந்நிலையில், இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மஜ்தல் ஷம்ஸ் பகுதியில் நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 12 பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரான் ஆதரவு ஹெசபுல்லா அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது. ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் இருந்து குழந்தைகள் பெண்கள் உள்பட 12 பேரின் சடலங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில் 19 பேர் படுகாயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் 6 பேர் தீவிர காயங்களுடன் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருவதாகவும் மீதமுள்ளவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பியதாக இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
திடீர் தாக்குதலால் அப்பகுதி பதற்றம் அடைந்துள்ளது, மேலும் மருத்துவமனைகளில் அவசரநிலை உருவாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. பல்வேறு தாக்குதல்களால் படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனைகளில் தொடர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அங்கு ரத்தம் தட்டுப்பாட்டு ஏற்பட்டு உள்ளது. பொது மக்கள் தாமாக முன்வந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு ரத்த தானம் செய்ய வேண்டும் என உள்ளூர் நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.
தாக்குதலை தொடர்ந்து மஜ்தல் ஷம்ஸ் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் குவிக்கப்பட்டு உச்சபட்ச உஷார் நிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது. ஈரான் ஆதரவு ஹெசபுல்லா அமைப்பு தான் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை கூறி வரும் நிலையில், ராக்கெட் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கமலா ஹாரிஸுக்கு ஒபாமா ஆதரவு.. சூடு பிடிக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல்! - obama supports Kamala Harris