கோபாலமின் (Cobalamin) என்றழைக்கப்படும் வைட்டமின் பி12 மனித உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு மிகவும் அவசியமான ஒன்று. நமது உடல் சீராக இயங்குவதற்கும், உண்ணும் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை உறியவும், உணவை உடல் கிரகித்துக்கொள்ள வைட்டமின் பி12 உதவுகிறது. ஆனால், "மோசமான உணவுப்பழக்கம் மற்றும் ஊட்டச்சத்து இல்லாத உணவுகளை உண்பதால் இளம் வயதினர் மத்தியிலும் பி12 குறைபாடு தொடர்பான அறிகுறிகள் இருக்கின்றன" என்கிறார் மும்பையின் வோக்கார்ட் மருத்துவமனையின் உள் மருத்துவ ஆலோசகர் அனிகேத் முலே.
வைட்டமின் பி12 செயல்பாடு?: "வைட்டமின் பி12 குறைபாடு தற்போது பொதுவானதாகிவிட்டது. இந்த குறைபாடு சரியான நேரத்தில் நிர்வகிக்கப்படாவிட்டால், கடுமையான விளைவுகளுக்கு வழிவகுக்கும்" எனவும் மருத்துவர் எச்சரித்துள்ளார். 8 பி வைட்டமின்களில் ஒன்றான வைட்டமின் பி12, ரத்த சிவப்பு அணுக்களை உருவாக்குவதில் முக்கிய பங்கை கொண்டுள்ளது. கூடுதலாக, மூளை மற்றும் நரம்புகளின் செயல்பாட்டையும் ஆதரிக்கவும் உதவுகிறது.
உடலில், இந்த குறைபாடு உளவியல் மற்றும் நரம்பியல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு வழிவகுப்பதாகவும் கூறப்படுகிறது. சைவ உணவு உண்பவர்கள் மத்தியில் வைட்டமின் பி12 குறைபாடு அதிகரித்து, ஹைப்பர்ஹோமோசிஸ்டீனீமியா (Hyperhomocysteinemia) ஏற்படுத்துவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
சைவ உணவு உண்பவர்களுக்கே அதிக பாதிப்பு: குறிப்பாக கடுமையான உணவுமுறைகளை பின்பற்றுபவர்கள், எந்த வித சப்ளிமெண்ட்ஸ் அல்லது செறிவூட்டப்பட்ட உணவுகள் இல்லாமல் சைவ உணவு உண்பவர்கள் வைட்டமின் பி12 குறைபாடை எதிர்கொள்ள அதிக வாய்ப்பு உள்ளதாக கூறுகிறார் டாக்டர் அகர்வால். இது இரத்த சோகை, இரைப்பை குடல் கோளாறுகளை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.
தாவர அடிப்படையிலான உணவு முறையில் (Vegan) இயற்கையாகவே பி12 இல்லாததால், சைவ உணவு மற்றும் வீகன் உணவுமுறையை பின்பற்றுவர்களுக்கு இந்த குறைபாடு ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாமல், வயதானவர்களுக்கு வயிற்றில் அமிலம் உற்பத்தி குறைவதால், உணவில் இருந்து பி12 உறிஞ்சப்படும் சிக்கலை பெரியவர்கள் சந்திக்கின்றனர்.
நாள் ஒன்றுக்கு எவ்வளவு தேவை: ஒவ்வொருவரின் வயதிற்கு ஏற்ப வைட்டமின் பி12 அளவு தேவைப்படுகிறது. அந்த வகையில், எந்த வயதினருக்கும் எந்த அளவு வைட்டமின் பி12 தேவைப்படுகிறது என்பதை இந்த அட்டவணை மூலம் தெரிந்து கொள்வோம்.
வைட்டமின் பி12 குறைபாடு இருந்தால் தோன்றும் அறிகுறிகள்:
- வாய் புண்
- டிமென்ஷியா
- சோர்வு
- பசியின்மை
- புற நரம்பியல் நோய்
- இரத்த சோகை
- அடிக்கடி மனநிலை மாற்றம்
முன்னெச்சரிக்கை என்ன?: இறைச்சி, மீன், முட்டை மற்றும் பால் போன்ற பி12 நிறைந்த உணவுகளைச் அடிக்கடி எடுத்துக்கொள்ளவும். தானியங்கள், தாவர அடிப்படையிலான பால் பி12ன் சிறந்த ஆதாரங்களாக இருப்பதால் சைவ உணவு உண்பவர்கள் இவற்றை எடுத்துக்கொள்ளலாம். வீட்டில் வயதானவர்கள் இருந்தால், அவர்களை மருத்துவ ஆலோசனைக்கு கூடிச்செல்லவும். உணவில் இருந்து சத்துக்கள் உறிஞ்சுவதில் சிரமம் உள்ளவர்கள், மருத்துவர் ஆலோசனையுடன் பி12 மாத்திரைகள் (Supplements) எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க:
எலும்பு தேய்மானம்? தினமும் டீ, காபிக்கு பதிலா ஒரு ஸ்பூன் 'இதை' பாலில் கலந்து குடிங்க!
பெண்களை குறிவைக்கும் ஆட்டோ இம்யூன் குறைபாடு - ஆராய்ச்சியாளர்கள் கூறுவது என்ன?
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.