- " class="align-text-top noRightClick twitterSection" data="">
சென்னை: ரமலான் மாதத்தில் உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமிய மக்கள் நோன்பு(விரதம்) இருப்பதும், நாள் முழுவதும் நீர் கூட அருந்தாமல் நோன்பை கடைபிடிக்கும் வழக்கமும் கொண்டுள்ளனர். இது ஒரு இறை நம்பிக்கையின் அடிப்படையில் கடைபிடிக்கப்பட்டாலும், அறிவியல் பூர்வமாக சிறந்த டயட் என்றும் கூறலாம்.
அந்த வகையில் அதிகாலையில் எழுந்து தொழுகை முடித்து விட்டு நோன்பு இருக்க தொடங்கும் பொழுதும் சரி, மாலை நோன்பை துறக்கும்பொழுதும் சரி புரத சத்து அதிகம் நிறைந்த உணவுகளை உட்கொண்டு நாள் முழுக்க எணர்ஜியை தக்க வைத்துக்கொள்வார்கள். அதற்காக தயாரிக்கப்படும் உணவுகளில் ஹலீம் மிக முக்கியமான ஒரு உணவு.
எலும்பு நீக்கப்பட்ட ஆட்டு இறைச்சி, மாட்டு இறைச்சி, அல்லது கோழி இறைச்சி, அதனுடன் சுத்தமான நெய், மசாலா பொருட்கள், பருப்பு வகைகள், பார்லி அரிசி, கோதுமை உள்ளிட்ட பல பொருட்களை சேர்த்து, பெரிய கொப்பரைகளில், சுமார் 8 மணி நேரம் வரை வேகவைக்கின்றனர். அடுப்பு மீது கொப்பரைகளை வைத்து பார்த்திருப்போம்.
ஆனால் ஹலீம் தயாரிக்கும் போது, அனைத்து பகுதிகளுக்கும் வெப்பம் சரியாக பரவ வேண்டும் என்பதால் அடுப்புக்கு உள்ளேயே அண்டாவை புதைத்து வைத்து தயாரிக்கின்றனர். அடுப்புக் கரியின் தகிக்கும் தனலில் கரி வெந்து கொண்டிருக்கும் போதே, அதில் உள்ள குருத்தெலும்புகள் மசிந்து போகும் விதமாக மரத்தால் ஆன சம்மட்டிகள் மூலம் இடிக்கின்றனர்.
8 மணி நேரம் பொறுமையாக வெந்து, குழைந்து போகும் இறைச்சி மாவு பதத்திற்கு வந்த பின்னர் தான் ஹலீம் என்ற பெயருக்கு பொருத்தமாக மாறுகிறது. அதன் பிறகு கொஞ்சம் தட்டில் எடுத்து வைத்து, பச்சை மிளகாய், வறுத்த வெங்காயம் உள்ளிட்டவைகளை பரவலாக தூவி, சூடாக பரிமாரப்படும் "ஹலீம்" அடடா... அந்த சுவைக்கு இஸ்லாமியர்கள் மட்டுமா? மதம் கடந்து அத்தனை மக்களும் அடிமை என்றே கூறலாம்.
அரேபிய உணவான இந்த ஹலீம், மன்னர் நிஜாமுதீன் காலத்தில் இந்தியாவிற்கு வந்த அரேபிய போர் வீரர்கள் வாயிலாக இங்கு பரவி இருக்கிறது. அதனை தொடர்ந்து இன்று வரை அந்த பழமை மாறாமல் அதே சுவையுடன் ஹலீம் ஹைதராபாத்தில் தயாரிக்கப்படுகிறது. இது குறித்து ஈடிவி பாரத் பிரபல உணவகமான பிஸ்தா ஹவுஸ் தலைமை நிர்வாகியான முகமது அகிலிடம் நேர் காணல் நடத்தியது.
அப்போது பேசிய அவர், நாள் ஒன்றுக்கு சுமார் 10 ஆயிரம் கிலோ ஹலீம் விற்பனையாவதாக தெரிவித்துள்ளார். சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான பிளேட்டுகள் விற்பனை செய்யப்படும் நிலையில், நாடு முழுவதும் ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் ஹலீம் மக்கள் மத்தியில் விற்பனையாவதாகவும் தெரிவித்தார்.
பிஸ்தா ஹவுஸ் போன்று இன்னும் பல உணவகங்கள் இந்த ஹலீம் தயாரிப்பிலும், விற்பனையிலும் ஆர்வம் காண்பித்து வரும் நிலையில், மக்களுக்கு இதன் மீது இருக்கும் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், நாட்டின் எந்த பகுதிக்கு சென்று ஹலீம் உட்கொண்டாலும், ஹைதராபாத் ஹலீம் சுவை எங்கும் கிடைக்காது என பெருமிதம் தெரிவித்த அவர், இந்த ஹைதராபாத் ஹலீமுக்கு உலக நாடுகள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பு இருப்பதாக கூறினார்.
ஹலீம் இங்கு தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த நிலையில், கால தாமதம் ஏற்படும் காரணத்தால் அதன் மனம் மற்றும் சுவையில் மாறுபாடு ஏற்படுவதாகவும், இதனால் ஹலீம் தயாரிப்பாளர்களை இங்கிருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்து வியாபாரத்தை விரிவுபடுத்தி உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
வெளிநாடுகளில் ஹலீம் தயாரிக்கும் சமையல்காரர்களுக்கு மாதம் 2 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார். புவி சான்று பெற்ற ஹைதராபாத் ஹலீம் நாட்டின் வருமானம் மட்டும் அல்ல பெருமையும் கூட..
இதையும் படிங்க: வெயில் காலத்திற்கான 7 ஹைட்ரேஷன் டிரிங்ஸ்.. ட்ரை பண்ணி பாருங்க.! - 7 Hydration Drinks For Summer