ஹைதராபாத்: உடல் எடை அதிகரித்தாலே முதலில் வெளிச்சத்திற்கு வருவது தொப்பை தான். தொப்பை வெளியே தெரிய ஆரம்பித்த பின்னர் தான் உடல் பருமனாக இருக்கிறோம் என்ற உணர்வே நினைவுக்கு எட்டுகிறது. அதற்குப் பிறகு தான் அதை மறைக்கவும் குறைக்கவும் வழிகளைத் தேடுகிறோம்.
உடல் எடையை விட தொப்பையை குறைப்பது பெரும் பாடாக இருக்கிறது என பலர் சொல்லி நாம் கேட்டிருப்போம். டயட், ஜிம், பூங்காவில் மணிக்கணக்கில் ஓடினாலும் தொப்பை குறைந்தபாடில்லை என தொடர்ந்து ஒரு புறம் மக்கள் வேதனையை சொல்லி கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால், உணவுமுறையை தவிர, தொப்பை அதிகரிக்க பல காரணிகள் உள்ளன என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
உடற்பயிற்சியின்மை: நவீன உலகத்தை நோக்கி செல்லும் நமக்கு தினமும் உடற்பயிற்சி செய்ய நேரம் கிடைப்பதில்லை என்கின்றனர் பலர். ஆனால், தினமும் காலை ஒரு மணி நடைப்பயிற்சிக்காக உங்கள் வாழ்க்கையில் நேரம் ஒதுக்குவதால் தொப்பையை சுற்றியுள்ள கொழுப்பு கரைவது மட்டுமல்லாமல் முதுமையில் உடல் வலிமையாக இருக்கிறது.
ஆரோக்கியமற்ற உணவு: ஆசையாக இருக்கிறது என பசி இல்லாத போதும் நாம் சாப்பிடும் உணவு உடலுக்கு ஆரோக்கியமற்ற உணவாக தான் செல்கிறது. இதன் விளைவுதான் வயிற்றைச் சுற்றி கொழுப்பாக மாறி தொப்பை போடுகிறது. பலர், தங்கள் உடலுக்குத் தேவையானதை விட அதிக கலோரிகளைக் சாப்பிடுகிறார்கள். இதனால் அடிவயிற்றில் கொழுப்பு சேர்ந்து பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது.
மது அருந்துதல்: மது குடிக்க ஆரம்பித்த சில நாட்களிலேயே தொப்பை வெளியே தெரிவதை நம்மால் பார்க்க முடியும். இதற்கு காரணம் மதுவில் உள்ள கலோரிகள். இது தவிர பலர் மது சாப்பிடும் போது அசைவ உணவுகளை சைட் டிஷ்ஷாக உண்கின்றனர். இதனால், இரண்டும் சேர்ந்து அடிவயிற்றில் கொழுப்பாக உருவெடுக்கிறது.
புகைபிடித்தல்: தொப்பை போடுவதற்கு முக்கிய காரணம் புகைப்பிடிப்பது என்கிறது நேஷனல் லைப்ரரி ஆஃப் சயின்ஸ் ஆய்வறிக்கை. புகைப்பிடிப்பதால், உடலில் உள்ள நல்ல கொழுப்புகள் குறைந்து கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாகிறது. இது நேரடியாக வயிற்றைச் சுற்றியுள்ள கொழுப்பை அதிகரிக்கிறது.
இதற்கிடையில், 2011 ஆம் ஆண்டில் உடல் பருமன் பற்றிய சர்வதேச இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், புகைபிடிக்காதவர்களை விட புகைபிடிப்பவர்கள் வயிற்றைச் சுற்றி கொழுப்பு சேர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று தெரியவந்துள்ளது.
இரவில் தூக்கமின்மை: ஒவ்வொரு மனிதனுக்கும் தேவையான தூக்கம் கிடைக்காத போது, வாழ்க்கை முறையில் பல மாற்றங்கள் ஏற்படுகிறது. குறிப்பாக, இரவில் தூங்கவில்லை என்றால் காலையில் அதிகமாக சாப்பிடும் நிலை ஏற்படுகிறது. இது தொப்பை அதிகரிப்பதற்கான முக்கிய காரணிகளாக இருக்கிறது.
மனஅழுத்தம்: வயிற்றைச் சுற்றி கொழுப்பை அதிகரிக்கச் செய்யும் காரணிகளில் மன அழுத்தமும் ஒன்று. நீங்கள் மன அழுத்தத்தில் இருக்கும்போது உடல் கார்டிசோல் என்ற ஹார்மோனை உற்பத்தி செய்கிறது. ஹார்மோனின் தொடர்ச்சியான வெளியீடு அதன் அளவை அதிகரித்து வயிற்றைச் சுற்றி கொழுப்பு குவிவதற்கு காரணமாகிறது.
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.