டெல்லி: நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடர் நேற்று (ஜூலை.22) கூடியது. மக்களவையில் 2023-24 நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கைக்கு முன்னோட்டமாக கருதப்படும் பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
பொருளாதார ஆய்வறிக்கை என்பது கடந்த நிதியாண்டில் அரசின் நிதி செயல்பாடு எப்படி இருந்தது?, இந்திய பொருளாதாரம் எப்படி செயல்பட்டது என்பதை கூறும் ஆய்வறிக்கை. ஒவ்வொரு நிதியாண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முந்தைய நாள் பொருளாதார ஆய்வறிக்கை நிதித்துறையால் தாக்கல் செய்யப்படுகிறது. அந்த வகையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில், இந்தியாவில் உடல் பருமனானவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்திருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தியாவில் அதிகளவில் ஏற்படும் நோய்களில் 54 சதவீத நோய்கள் ஆரோக்கியமற்ற உணவுகளை எடுத்து கொள்வதாலே ஏற்படுவதாக பொருளாதார ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. ஆகவே இந்திய மக்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பெறுவதற்கு சுகாதாரமான சீரான உணவை நோக்கி மாற வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பதப்படுத்தப்பட்ட உணவு, சர்க்கரை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவு ஆகியவற்றை அதிகமாக எடுத்துக்கொள்வதாலும், குறைந்த உடல் செயல்பாடுகளாலும் உடல் பருமன் மற்றும் நுண்ணூட்ட சத்து குறைபாடுகள் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுகிறது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் அறிக்கையை (ICMR - Indian Council for Medical Research) மேற்கோள் காட்டி, ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் இளம் பருவம் முதல் பெரியவர்களுக்கான உடல்பருமன் விகிதம் மும்மடங்கு அதிகரித்துள்ளது என்றும், வியட்நாம், நமீபியா ஆகிய நாடுகளுக்கு அடுத்தப்படியாக இந்தியாவில் தான் அதிகளவிலான குழந்தைகளிடம் உடல் பருமன் இருக்கிறது என்றும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. கிராமப்புற இந்தியாவை விட, நகர்ப்புற இந்தியாவில் உடல் பருமன் பாதிப்பு அதிகரித்துள்ளதாக கூறிய தேசிய குடும்ப சுகாதார ஆய்வும் (National Family Health Survey - NFHS) குறிப்பிடப்பட்டுள்ளது.
உடல் பருமன் பாதிப்பு இந்திய நகர்ப்புறங்களில் உள்ள ஆண்களிடம் 29.8 சதவீதமாகவும், கிராமப் புறங்களில் உள்ள ஆண்களிடம்19.3 சதவீதமாகவும் உள்ளது. 18 வயது முதல் 69 வயதுடைய ஆண்களிடையே உடல் பருமன் 18.9 சதவீதத்தில் இருந்து 22.9 சதவீதமாகவும், பெண்களிடையே 20.6 சதவீதத்தில் இருந்து 24 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உடல் பருமன் பாதிப்பு ஆண்களிடையே 37 சதவீதமாகவும், பெண்களிடையே 40.4 சதவீதமாகவும் உள்ளது.
நமது அண்டை மாநிலமான ஆந்திர பிரதேசத்தில் உடல் பருமன் பாதிப்பு ஆண்களிடையே 31.1 சதவீதமாகவும், பெண்களிடையே 36.3 சதவீதமாகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மக்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: தாவரங்களில் இருந்து தாய்ப்பாலா? - கலிபோர்னியா ஆராய்ச்சியாளர்கள் அசத்தல் கண்டுபிடிப்பு! - Breast Milk From Plants