சென்னை: காலநிலை மாற்றம் மற்றும் வெப்ப அலையின் தாக்கம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆய்வு அறிக்கை தமிழக அரசிடம் வழங்கப்பட்ட நிலையில், ஆய்வு தொடர்பாக அத்துறையின் இயக்குநர் கொரியன் ஜோசப் ஈடிவி பாரத்திற்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.
அதில், வரும் காலத்தில் வெப்ப அலையின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் எனவும், இதனால் விவசாயம் மற்றும் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் 20100-ஆம் ஆண்டில் வெப்ப அலை 90 முதல் 120 நாட்கள் வீசும் எனவும், விவசாயம் பாதிக்கப்பட்டு உற்பத்தி 10 சதவீதத்திற்கு மேல் குறையும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு கடந்த 2014ஆம் ஆண்டுக்கு முந்தைய 30 ஆண்டு முதல் 2100ஆம் ஆண்டு வரை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அந்த 30 ஆண்டுகளில் 30 நாட்கள் மட்டுமே வெப்ப அலை வீசி உள்ளதாகவும், அதாவது ஆண்டுக்கு ஒரு நாள் மட்டுமே வெப்ப அலை இருந்ததாகவும் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு, தட்ப வெப்பநிலையின் மாற்றம் சுமார் 2 டிகிரி வரை அதிகரித்துள்ளது.
ஆனால், இந்த தட்ப வெப்பநிலையை 1.5-ல் இருந்து 2- டிகிரிக்குள் கட்டுப்படுத்தி வைக்க வேண்டும் என்பது உலக நாடுகளின் ஒப்பந்தம். ஆனால் அந்த ஒப்பந்தத்தை கடந்து தட்ப வெப்பநிலை அதிகரித்து வருகிறது என அவர் கூறியுள்ளார். மேலும், தட்ப வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதற்கான முக்கியக் காரணம், கார்பன் டை ஆக்சைடு அளவு அதிகரித்துள்ளதுதான். அதாவது, 1980ஆம் ஆண்டில் 270 பிபிஎம்-ஆக இருந்த கார்பன் டை ஆக்சைடு, தற்போது 430 பிபிஎம் ஆக அதிகரித்துள்ளது என கொரியன் ஜோசப் தெரிவித்தார்.
இதற்கு முக்கிய காரணம், பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்கள் பயன்பாடு, ஆலைகளில் இருந்து வெளியேறும் புகை உள்ளிட்டவைதான் என தெரிவித்த கொரியன் ஜோசப், கார்பன் டை ஆக்சைடை உள்வாங்கி ஆக்ஸிஜனாக மாற்றும் மரங்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டு போகிறது எனவும் வேதனை தெரிவித்தார். இந்த போக்கை கட்டுக்குள் கொண்டுவரா விட்டால் எதிர்காலத்தில் வெப்ப அலையின் தாக்கத்தில் இருந்து யாராலும் தப்ப முடியாது எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், தேசிய அளவிலும், மாநில அளவிலும் இந்த தட்ப வெப்பநிலையின் அளவை கட்டுப்படுத்த பல்வேறுகட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறிய கொரியன் ஜோசப், அரசுகளை கடந்து கிராமப்புற மக்கள் மட்டும் இன்றி நகர்புற மக்களும் மரங்களை வைக்கவும் இயற்கையை பேணவும் முழு முயற்சி எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இன்றைய தவறால் நாளை எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் முதல் பிரச்சனை காலநிலை மாற்றம் என்பதையும், நாம் வாழ்ந்துகொண்டு இருக்கும் இதே பூமியில் தான் நம் எதிர்கால சந்ததி வாழப்போகிறது என்பதையும் ஒவ்வொரு தனி மனிதனும் நினைவில் கொள்ள வேண்டும். முன்னோர்கள் நமக்காக விட்டுச்சென்ற இயற்கையை பாதுகாத்து எதிர்கால தலைமுறைக்கு கடத்திவிட வேண்டிய மிகப்பெரிய சமூகப்பொருப்பு ஒவ்வொருவருக்கும் உண்டு என்பதே இதன் மூலம் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என காலநிலை மாற்ற ஆய்வாளர்கள் அறிவுறுத்துகின்றனர்.
இதையும் படிங்க: வெப்ப அலையில் இருந்து தப்புவது எப்படி? கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகளுக்கு மருத்துவர் அட்வைஸ்.! - How To Survive A Heat Wave