சென்னை: ஓமன் நாட்டைச் சேர்ந்த 30 வயதான நோயாளிக்கு நாட்பட்ட வலியிலிருந்து நிவாரணத்தை வழங்கி அவரது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது சென்னை அப்போலோ கேன்சர் சென்டர் . பிற சிகிச்சைகள் பயனளிக்கத் தவறியிருக்கும்போது நாட்பட்ட, நரம்புடன் தொடர்புடைய வலியால் அவதியுறும் நபர்களுக்கு புதிய சிகிச்சை முறை பயனளிப்பதாக உள்ளது.
விரைச்சிரையில் (Testicle) உருவான ஒரு கட்டிக்கான அறுவைசிகிச்சையை ஓமன் நாட்டில் செய்ததற்குப் பிறகு, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, இடுப்பு கவட்டை மற்றும் மேற்புற தொடைப்பகுதியில் கடுமையான வலி தொடர்ந்து இந்நோயாளிக்கு இருந்து வந்திருக்கிறது.
விரிவான மதிப்பாய்வு மற்றும் பல்வேறு துறைகளை உள்ளடக்கிய மருத்துவக் குழுவின் முயற்சிகளுக்குப் பிறகு, கீழ்ப்புற வயிற்று சுவர் மற்றும் மேற்புற தொடையுடன் சந்திக்கின்ற பகுதியில் சேதமடைந்த ஒரு நரம்பின் காரணமாக, இந்த கடுமையான வலி இந்நோயாளிக்குத் தோன்றுவது கண்டறியப்பட்டது. முதன்மையான உணர்திறன் நரம்பு, முதுகுத்தண்டிலிருந்து தொடங்கி, தசைகளின் வழியாக கடந்து சென்று கவட்டைப் பகுதியை சென்றடைகிறது.
இப்பகுதியில் இந்நோயாளிக்கு அறுவைசிகிச்சை செய்யப்பட்டபோது, இந்நரம்பு சேதமடைந்ததன் காரணமாக கடுமையான வலி உருவாகி தொடர்ந்து இருந்திருக்கிறது. அடிவயிறு சார்ந்த கவட்டைப் பகுதியில் நரம்புக் குத்துவலி என்றும் இது அறியப்படுகிறது. மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு அதிகமாக நீடிக்கும் வலியானது, நாட்பட்ட வலி என வரையறுக்கப்படுகிறது.
- இதையும் படிங்க: சென்னை மருத்துவமனையில் ரோபோட்டிக்ஸ் மூலம் அறுவை சிகிச்சை; மருத்துவ கட்டணம் எவ்வளவு? பாதுகாப்பானதா? மருத்துவர் விளக்கம்!
உலகளவில் லட்சக்கணக்கான நபர்களை பாதிக்கின்ற ஒரு பொதுவான பிரச்சனை இது. இந்நோயாளிக்கான வலியைத் தணிப்பதற்காக தங்களது அனுபவம் மற்றும் புத்தாக்கத்தின் அடிப்படையில் ACC – ஐ சேர்ந்த முதுகுத்தண்டு அறுவைசிகிச்சை மற்றும் வலி நிவாரண சிறப்பு நிபுணர்களின் குழு, இந்நோயாளியின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டு இதுவரை முயற்சிக்கப்படாத ஒரு புதிய அணுகுமுறையை உருவாக்கியது.
நோயாளியின் முதுகுத்தண்டில் உணர்திறன் நரம்புகளைத் (DRG) தூண்டுவதற்கு ஒரு முதுகுத்தண்டு முடுக்கியைப் பொருத்தியதன் வழியாக சேதமடைந்த நரம்பிலிருந்து உருவாகும் வலி உணர்வுகளை மருத்துவக் குழு வெற்றிகரமாக தடுத்திருக்கிறது. நரம்பு சேதத்தினால் வலி உருவாகின்ற நோயாளிகளுக்கும் மற்றும் நாட்பட்ட மற்றும் சமாளிக்க இயலாத வலியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு பயனளிக்கும் சிகிச்சை முறை செய்யப்பட்டுள்ளது.
உணர்ச்சியை தூண்டுதல்: சென்னை, அப்போலோ கேன்சர் சென்டரின் முதுகுத்தண்டு அறுவைசிகிச்சை முதுநிலை நிபுணர் டாக்டர். அப்பாஜி கிருஷ்ணன், வலி நிவாரண சிறப்பு நிபுணர் ஆனந்த் முருகேசன் கூறும்போது, "மனிதனின் நரம்பில் ஏற்படும் பாதிப்பால் தொடர்ந்து வலி ஏற்படுகிறது. குறிப்பாக விபத்தில் கை, காலில் முறிவு ஏற்படும் போதும், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நரம்பில் பாதிப்பு ஏற்படும் போது வலி தொடர்ந்து இருந்து வருகிறது.
வலியை குணப்படுத்த பாதிக்கப்பட்ட நரம்பின் உணர்ச்சியை செயலிழக்க செய்தல் அல்லது பாதிக்கப்பட்ட நரம்பில் உணர்ச்சியை தூண்டுதல் என 2 முறைகள் உள்ளது. தற்பொழுது பாதிக்கப்பட்ட நரம்பிற்கு உணர்வு தூண்டல் அளித்து மீண்டும் செயல்பட வைத்துள்ளோம். ஒரு ஊசி மூலம் சரியாக அதை செலுத்தி செயல்படுத்தி உள்ளோம்.
சிகிச்சை முறை: தோல் உள்ளே ஒரு 4 மில்லி அடர்த்தி, 4 சென்டி மீட்டர் அகலம் கொண்ட பேட்டரி வைக்கப்படும் அது ஒரு சிறிய கரன்ட் மூலம் தேவைக்கு அதிகமாக தூண்டி வலியின் தன்மை குறைந்து விடும். மனித உடலில் 90 மில்லி வோல்ட்ஸ் மின்சாரம் இதன் மூலம் பரவி தூண்டப்படும். இது முதுகுத்தண்டு அருகில் வைக்கப்படும் பேட்டரி மேல் பெல்ட் போல போடலாம் அது சார்ஜ் ஆவதற்கும், வலியை குறைப்பதற்கு frequency மாற்ற ஒரு ரிமோட் இருக்கும். சாதாரண வலி பிரச்சனைகளுக்கு இல்லாமல், சர்க்கரை நோய் சார்ந்த பிரச்சினைகள் நரம்பு சார்ந்து ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வாக இந்த முறை பயன்படும்.
இந்தக் கருவியின் மூலம் 10 ஆண்டுகள் தொடர்ந்து வலி இல்லாமல் இருக்க முடியும். அதன் பின்னர் பேட்டரியை மட்டும் மாற்றினால் போதுமானது. மேலும் நோயாளி வளரும் போது, உடலில் பொருத்தப்படும் எலக்ட்ரோ கம்பி நரம்பின் மீது படும் வகையில் மாற்றம் செய்ய முடியும்.
விலை இவ்வளவா?: இந்தியாவில் முதல்முறையாக இந்தமுறையில் சிகிச்சை அளித்துள்ளோம். மேலும் இந்தக்கருவியின் விலை 15 லட்சம் அளவில் வெளிநாடுகளில் இருக்கிறது. இந்தியாவில் அதிகளவில் தேவை இருப்பதால் மத்திய சுகாதாரத்துறையுடன் பேசிக்கொண்டுள்ளோம். மத்திய அரசு அனுமதி அளித்தால் அதன் விலைக்குறையும் போது, சிகிச்சை செய்யும் செலவும் குறையும்" என தெரிவித்தனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்