சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள விஜய் தற்போது, தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சி ஒன்றை தொடங்கி, 2026ஆம் ஆண்டு வரவுள்ள சட்டமன்றத் தேர்தலில் களமிறங்க உள்ளார். ஒப்புக் கொண்ட படங்களுக்குப் பிறகு சினிமாவில் இருந்து விலகுவதாகவும், சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை மூலம் விஜய் தெரிவித்துள்ளார்.
இது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், நடிகர் விஜய் தற்போது தனது 68-வது திரைப்படமான கோட் (GOAT - The Greatest of All Time ) என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்குகிறார். ஏஜிஸ் எண்டர்டெய்மண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தில் நடிகர்கள் பிரசாந்த், பிரபு தேவா, சினேகா, லைலா, மீனாட்சி செளத்ரி, மோகன், ஜெயராம், அஜ்மல் அமீர் உள்ளிட்ட ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகின்றனர். சண்டைப் பயிற்சியாளராக திலீப் சுப்பராயன், ஒளிப்பதிவாளர் சித்தார்தா நுனி, தயாரிப்பு வடிவமைப்பாளர் ராஜீவன், எடிட்டர் வெங்கட் ராஜன் உள்ளிட்ட தொழில்நுட்பக் குழுவினர் இப்படத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். விஜயின் புதிய கீதை படத்திற்குப் பிறகு, மீண்டும் யுவன் சங்கர் ராஜா, விஜய் இணைந்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது புதுச்சேரியில் நடைபெற்று வரும் நிலையில், அங்கு கூடிய ரசிகர்களை விஜய் சந்தித்தார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில், இப்படத்திற்கு இசை அமைத்துள்ள யுவன் சங்கர் ராஜா, இலங்கையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது நிருபர்கள் கோட் படத்தின் அப்டேட் கேட்டனர். அதற்கு சொல்ல முடியாது என்று சிரித்துக்கொண்டே பேசினார். மேலும், “இந்த முறை மனசுல க்ளியரா இருக்கேன். பேச்சு கிடையாது வீச்சுதான். எல்லாம் நல்லா வந்துட்டு இருக்கு. நானும் காத்துக்கொண்டு இருக்கிறேன். ஒட்டுமொத்த படக்குழுவினரும் காத்துக்கொண்டு இருக்கின்றனர். படத்தின் பின்னணி இசையும் நீண்ட காலம் பேசப்படும் என்று கணிக்கிறேன்” என்றார்.
இதையும் படிங்க: ரசிகர்கள் வெள்ளத்தில் தவெக தலைவர் நடிகர் விஜய்..! தனக்கே உரிய பாணியில் செல்பி!