சென்னை: தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை கடந்த வாரங்களில் ரீ ரிலீஸ் படங்கள் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக திரையிடப்பட்டு வந்தது. இதனால் கடந்த ஒரு சில வாரங்களில் வெளியான எந்த தமிழ்ப் படங்களும், ரசிகர்கள் மத்தியில் போதிய வரவேற்பைப் பெறவில்லை. ஆனால், கடந்த வாரம் முதல், மலையாளப் படமான மஞ்சுமெல் பாய்ஸ் தமிழகம் எங்கும் மிகப்பெரிய வரவேற்புடன் ஓடி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, இந்த வாரமும் அநேக திரையரங்குகளில் மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படமே திரையிடப்பட்டு வருகிறது. இருப்பினும், இந்த வாரம் சில தமிழ் படங்கள் வெளியாகின்றன. அந்த வகையில், ஜே பேபி, அரிமாபட்டி சக்திவேல், கார்டியன், சிங்கப்பெண்ணே உள்ளிட்ட 6 படங்கள் வெளியாகின்றன.
ஜே.பேபி: சுரேஷ் மாரி இயக்கத்தில், ஊர்வசி நடித்துள்ள படம் 'ஜே.பேபி'. இப்படத்தில் அட்டகத்தி தினேஷ், லொள்ளு சபா மாறன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை கோல்டன் ரேஷியோ ஃபிலிம்ஸ் மற்றும் லிட்டில் ரெட் கார் ஃபிலிம்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து இயக்குநர் பா.ரஞ்சித் தயாரித்துள்ளார்.
படத்துக்கு டோனி பிரிட்டோ இசையமைத்துள்ளார். மேலும், ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரெய்லர், சமீபத்தில் வெளியாகி ரசிக்கப்பட்டது. இப்படம் இந்த வாரம் வெளியாக உள்ள நிலையில், படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
அரிமாபட்டி சக்திவேல்: அறிமுக இயக்குநர் ரமேஷ் கந்தசாமி இயக்கத்தில் பவன், மேக்னா எலன் ஆகியோர் நடித்துள்ள படம் 'அரிமாபட்டி சக்திவேல்'. இப்படத்தில் நடிகர் சார்லி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படமும் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது.
கார்டியன்: கூகுள் குட்டப்பா படத்தை இயக்கிய சபரி - குரு சரவணன் இணைந்து இயக்கியுள்ள படம் 'கார்டியன்'. இப்படத்தில் ஹன்சிகா முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். இது ஒரு ஹாரர் படமாக உருவாகி உள்ளது. வாலு, ஸ்கெட்ச் உள்ளிட்ட படங்களை இயக்கிய விஜய் சந்தர், இப்படத்தை தயாரித்துள்ளார். சாம் சி.எஸ் இசை அமைத்துள்ள இப்படம் மார்ச் 8 அன்று வெளியாகிறது.
இதேபோல் புதுமுகங்கள் நடித்துள்ள, நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே, டெவில் ஹன்டர்ஸ், ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ள சிங்கப்பெண்ணே ஆகிய படங்களும், மகளிர் தினமான மார்ச் 8ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இதையும் படிங்க: சிறந்த நடிகர் மாதவன், சிறந்த நடிகை ஜோதிகா.. 2015க்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் அறிவிப்பு!