சென்னை: இயக்குநர் எழில் தமிழ் சினிமாவில் 'துள்ளாத மனமும் துள்ளும்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர். இதையடுத்து இவர் இயக்கிய பூவெல்லாம் கேட்டுப்பார், பெண்ணின் மனதை தொட்டு, தீபாவளி, மனம் கொத்தி பறவை, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் ஆகிய படங்கள் வெற்றிப் பெற்றன.
இயக்குநர் எழில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 25 ஆண்டுகள் கடந்துள்ளது. தற்போது மீண்டும் விமலை வைத்து 'தேசிங்கு ராஜா 2' படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் எழிலின் 25 ஆண்டு கால திரையுலக வாழ்க்கையை கொண்டாடும் வகையில், தேசிங்கு ராஜா 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
இவ்விழாவில் ஜெயம் ரவி, விமல், இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், எஸ்.ஏ.சந்திரசேகர், ஆர்.வி.உதயகுமார், சுசீந்திரன், ரவி மரியா, ஆர்.கே.செல்வமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்விழாவில் பேசிய இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், 'கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நான் மாலை நேரத்தில் நடக்கும் எந்த விழாவிலும் கலந்து கொள்வதில்லை. ஆனால், இன்று எழிலுக்காக வந்தேன். அப்போது இருந்து இப்போது வரை ஒரே மாதிரி பழகும் நபர்.
ஒரு கதைக்கருவை யார் நடிச்சாலும் வெற்றி பெறக் கூடிய திரைக்கதை அமைக்க வேண்டும். என் மகன் விஜய்க்கு திரை வாழ்வில் 'துள்ளாத மனமும் துள்ளும்' உள்ளிட்ட பத்து படங்கள் மைல்கல்லாக இருந்தன. அதில் பேரரசு மற்றும் எழிலும் உள்ளனர். துள்ளாத மனமும் துள்ளும் கதையின் மீது இருந்த நம்பிக்கையில் எப்போது கால்ஷீட் வேண்டும் என்றேன்.
என்னைப் பற்றி பலர் பலவிதமாக சொல்வார்கள். உண்மையான உதவி இயக்குநராக கதை கேட்பேன். ஜால்ரா அடிக்கிற உதவி இயக்குனராக அல்ல. எவன் ஒருவன் தன் தாயை உயர்த்துகிறானோ? அவனை நான் உயர்த்திக் கொண்டே இருப்பேன் என்று பைபிளில் உள்ளது.
நானும் எனது அம்மாவைப் பார்த்துக்கொண்டேன். அதனால் தான், நானும் நன்றாக உள்ளேன்; எனது பிள்ளையும் நன்றாக உள்ளார். இப்போது திரைக்கதைக்கு யாரும் மரியாதை தருவதில்லை. ஹீரோ கிடைத்தால் போதும். இப்போது உள்ள ரசிகர்கள் ஹீரோவுக்காக படம் பார்க்கிறார்கள்' என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், 'சமீபத்தில் ஒரு இயக்குநரை தொலைபேசியில் அழைத்து வாழ்த்தினேன். முதல் பாதி நன்றாக இருப்பது பற்றி சொல்லும் போது கேட்டவர், இரண்டாம் பாதி சரியில்லை என்றவுடன் நான் சாப்பிட்டு கொண்டு இருக்கிறேன் என்கிறார். இக்காலத்தில் உள்ள இயக்குநர்களுக்கு விமர்சனங்களை தாங்கும் தைரியம் மற்றும் பக்குவம் இல்லை.
ஏ.ஆர்.முருகதாஸ் துப்பாக்கி பட கதையை சொன்னவுடன் கட்டிப் பிடித்து பாராட்டினேன். ஸ்லீப்பர் செல் பற்றி அவரிடம் கேட்ட கேள்விக்கு படத்தில் பதில் வைத்திருந்தார். அதனால் தான், வெற்றி இயக்குநராக உள்ளார். அந்த காலகட்டத்தில் பத்து பேரை வெட்டினால் வில்லன் என்றோம். இப்போது அவரையே ஹீரோ என்கிறோம். எல்லோரும் ஹீரோவைப் பின் தொடர்கின்றனர்.
இயக்குநர்களே, உங்கள் காலை தொட்டு கேட்டுக் கொள்கிறேன் தயவு செய்து நல்ல படங்களை கொடுங்கள் என்றார். மேலும் துள்ளாத மனமும் துள்ளும் படத்திற்கு பிறகுதான் கேரளாவில் விஜய்க்கு ரசிகர்கள் அதிகரித்தனர். துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் யார் நடித்தாலும் வெற்றி பெற்றிருக்கும்.
எம்ஜிஆர் திரைப்படங்களில் மது அருந்தி பார்த்துள்ளீர்களா? ஏனென்றால், அவரைப் பின் தொடர கோடான கோடி இளைஞர்கள் இருந்தனர். இயக்குனர்களே இளைஞர்களை உருவாக்குகின்ற சமூகத்தின் மீது அன்பு கொண்டவர்களை உருவாக்க அதேபோன்று நாயகர்களை உருவாக்குங்கள்.
சமீபத்தில் வெற்றி பெற்ற சிறிய படங்களில், பெரிய நடிகர்கள் யார் இருந்தார்கள். விமலின் விலங்கு வெப் தொடரை பார்த்து எப்படி இவரை விட்டுவிட்டார்கள் என்றும், நானே இவரை ஏன் விட்டுவிட்டேன் என்றும் வருந்தினேன்' என்று பேசினார்.
இதையும் படிங்க: வெளியான பாபி தியோலின் மிரட்டல் லுக்: புகைப்படம் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த கங்குவா படக்குழு..!