சென்னை: தமிழ் சினிமாவில் உதவி ஒளிப்பதிவாளராக இருந்து தற்போது இயக்குநராக வலம் வருபவர், மணிகண்டன். இவர் காக்கா முட்டை, கடைசி விவசாயி, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை போன்ற திரைப்படங்களை இயக்கி உள்ளார். அதில் காக்கா முட்டை மற்றும் கடைசி விவசாயி ஆகிய இரு திரைப்படங்களுக்கும் மத்திய அரசால் தேசிய விருதுகள் கிடைத்தது.
இந்த நிலையில், மதுரை மாவட்டம், உசிலம்பட்டி எழில் நகரில் உள்ள தனது வீட்டில் அவர் குடும்பத்துடன் வசிக்கிறார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி, இவரது வீட்டின் பூட்டை உடைத்து சுமார் ரூ.1 லட்சம் பணம் மற்றும் 5 சவரன் தங்க நகைகள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். மேலும், தேசிய விருதுக்கான வெள்ளிப் பதக்கங்களும், அவற்றோடு திருடு போனதாகவும் தகவல் வெளியாகின.
இந்த சம்பவம் குறித்து உசிலம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பிரபல இயக்குநர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், வீட்டில் கொள்ளை அடித்த மர்மநபர்கள், இன்று (பிப்.13) மணிகண்டன் வீட்டில் பாலித்தீன் பையில், “ஐயா எங்களை மன்னித்து விடுங்கள்.. உங்கள் உழைப்பு உங்களுக்கு” என்ற மன்னிப்பு கடிதத்துடன் தேசிய விருதுக்கான வெள்ளிப் பதக்கங்களை மட்டும் தொங்க விட்டுச் சென்றுள்ளனர். இந்த தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், தேசிய விருதுக்கான வெள்ளிப் பதக்கங்களைக் கைப்பற்றி தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:"தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி செயல் ஏற்கத்தக்கது அல்ல" - ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம்