சேலம்: சென்னை, கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த 13ஆம் தேதி சென்னையில் இருந்து கோவைக்கு நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் பயணித்துள்ளார். அப்போது பயணிகளுக்கான உபசரிப்பு மற்றும் உணவு குறித்து புகார் புத்தகத்தில் தனது கருத்தை எழுதியுள்ளார்.
அந்த புகாரில், ”உணவு பரிமாறியவர்கள் சிறப்பாக செய்துள்ளனர். ரயில் சுகாதாரமாக இருந்தது, ஆனால் இரவு 7.22 மணிக்கு வழங்கிய உணவு மற்றும் சிக்கன் மோசமாக இருந்தது. உணவுக்காக பெருந்தொகையை வாங்கிக் கொண்டும் இப்படி பரிமாறுவது கண்டிக்கத்தக்கது. ஆரோக்கியம் அவசியம் நன்றி” என கூறியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து நடிகர் பார்த்திபன், புகாரை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு "வந்தே பாரத் தந்த உணவு தரமாக இல்லை எனவும், பயணிகளுக்கு பயனுள்ளதாக இல்லை எனவும், இந்த உணவு ஆரோக்கிய கேடு என சுற்றத்தார் முணுமுணுத்தார்கள், நான் புகார் புத்தகத்தை வாங்கி கிறுக்கல்கள் எழுதிக் கொடுத்தேன். நான் ரயிலில் தொடர்ந்து செல்லாவிட்டாலும் செல்பவர்கள் பயன்பெறும் வகையில் முக்கியமான விஷயம்” என்று குறிப்பிட்டு இருந்தார்.
வந்தே பாரத் ரயில் உணவு குறித்து நடிகர் பார்த்திபனின் பதிவு கவனம் பெற்ற நிலையில், இந்த புகார் குறித்து உரிய விசாரணை நடத்த தெற்கு ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டது. மேலும் இந்த புகாரின் பேரில் நடிகர் பார்த்திபன் உள்ளிட்ட பயணிகளுக்கு உணவு வழங்கிய இடம் சேலம் ரயில்வே கோட்டம் பகுதி என்பதால், சேலம் ரயில்வே அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கினர் . அதில் சேலத்தில் சேர்ந்த உணவு ஒப்பந்ததாரர் வழங்கிய உணவு தான் தரமில்லாத வகையில் இருந்தது என்பதை உறுதி செய்தனர்.
இதனையடுத்து அந்த ஒப்பந்ததாரர் உணவு தயார் செய்யும் சமையல் கூடத்திற்கு கோட்ட உதவி வணிக மேலாளர் குமரபாண்டரங்கா தலைமையிலான அலுவலர்கள் சென்று ஆய்வு செய்தனர். அப்போது உணவு தயாரிப்பில் சில குறைபாடுகளை கண்டறிந்ததை அடுத்து, ஒப்பந்ததாரருக்கு அபராதம் விதித்தனர். மேலும் இனி பயணிகளுக்கு வழங்கப்படுகின்ற உணவு மிகவும் தரமானதாகவும், எவ்வித குறைபாடும் இருக்கக் கூடாது என அந்த ஒப்பந்ததாரருக்கு எச்சரிக்கையும் விடுத்தனர்.
இதையும் படிங்க: ஆண்கள் அணியில் சூழ்ச்சி செய்யும் தர்ஷா; பெண்களுக்கு எதிராக செயல்படும் முத்துக்குமரன்?... சூடுபிடிக்கும் பிக்பாஸ் வீடு!
இதனைத்தொடர்ந்து சென்னை, கோவை வந்தே பாரத் ரயிலில் உணவு விநியோகம் செய்யும் போது ஊழியர்கள் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள், உணவு எவ்வாறு எடுத்து செல்கிறார்கள் என்பதையும் அதிகாரிகள் குழு ஆய்வு செய்து அறிவுரைகளையும் வழங்கினர். வந்தே பாரத் ரயிலில் தரம் இல்லாத உணவு வழங்கப்பட்ட விவகாரத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய நடிகர் பார்த்திபனுக்கு நெட்டிசன்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்